போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்படுவது பற்றி அமைச்சர்
சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு வலுவான ஆதரவு இருப்பதாகவும் அது பற்றிய அனைத்துலக விமர்சனம் மிகைப்படக் கூறப்படுவதாகவும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
உண்மையைச் சொல்லப் போனால், போதைப்பொருள் கடத்த நினைப்பவர்கள், அவ்வாறு செய்வதை மரண தண்டனை தடுப்பதாக இந்த வட்டாரத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று குறிப்பிடுவதாக அவர் சொன்னார். போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் கடுமையான நிலைப்பாடு, உயிர்களைக் காப்பதை இது காட்டுகிறது என்றார் அவர்.
'தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்' செய்தி நிறுவனத்துக்கு அமைச்சர் சண்முகம் அளித்த பேட்டியில், போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் சட்டங்கள் குறித்தும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் சட்டப்பிரிவு 377ஏ பற்றியும் பேசினார். அவர் அளித்த பேட்டியின் விவரங்களை உள்துறை அமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்டது.
போதைப்பொருள் கடத்தியோரைத் தூக்கிலிடுவதை 80 விழுக்காட்டிற்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் ஏற்றுக்கொள்வதை உள்ளூரில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் காட்டியுள்ளதாக அவர் சொன்னார்.
மேலும், போதைப்பொருள் கடத்தினால் இங்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பதால், மற்ற நாடுகளில் வசிப்போர் இக்குற்றங்கள் புரிவதைத் தவிர்த்துக்கொள்வதாக இந்த வட்டாரத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
மரண தண்டனை ஆக்ககரமாக இருப்பதாக 83 விழுக்காட்டினரும் ஆயுள் தண்டனையைவிட அது ஆக்ககரமாக இருப்பதாக 69 விழுக்காட்டினரும் கூறினர்.
"இங்கு மரண தண்டனை குறித்த விழிப்புணர்வு மிகவும் அதிகம். போதைப்பொருள் கடத்தினால் பிடிபடும் சாத்தியம் அதிகம் என்பது பற்றிய விழிப்புணர்வும் மிகவும் அதிகம். எனவே, பலரும் சிங்கப்பூருக்கு போதைப்பொருள் கடத்த துணிவதில்லை. மரண தண்ட னையை நாங்கள் நீக்கினால், மேலும் பலர் போதைப்பொருளைக் கடத்துவர். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை," என்றார் திரு சண்முகம்.

