சொகுசு கைப்பை மறுவிற்பனையாளரான 'வெஸ்ட்குளோசட்'டிடம் $29,900 செலுத்திய மாது ஒருவரிடம் அந்தக் கைப்பை கடைசிவரை வந்துசேரவில்லை. அதையடுத்து, கடந்த மாதம் அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 33 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை நேற்று தெரிவித்தது.
மறுவிற்பனை சொகுசு கைப்பைகளுக்காக பணத்தைப் பெற்றுக்கொண்டும் வாடிக்கையாளர்களிடம் பொருளை ஒப்படைக்காததன் தொடர்பில், 'வெஸ்ட்குளோசட்'டிற்கு எதிராக காவல்துறைக்கு குறைந்தது ஐந்து புகார்கள் கிடைத்து இருப்பதாக அறியப்படுகிறது.
'வெஸ்ட்குளோசட்'டிற்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய காவல்துறை, அவை குறித்து தான் விசாரணை நடத்தி வருவதாகக் கூறியது.
இந்த மோசடியால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த நிறுவனத்திடம் பணத்தைச் செலுத்தியும் பொருளை இன்னும் பெற்றிராத வாடிக்கையாளர்கள் சிலர், காவல்துறையிடம் தாங்கள் புகார் அளிக்க இருப்பதாகக் கூறினர்.
சொகுசு கைப்பைகளை ஒப்படைக்க முடியாததற்கு 'வெஸ்ட்குளோசட்' தங்களிடம் சாக்குப்போக்கு சொன்னதாக வாடிக்கையாளர்கள் அறுவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.
நிறுவனத்துக்கு நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் முதலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குணமடைய காலஅவகாசம் தேவைப்படுவதாகவும் 'வெஸ்ட்குளோசட்' தங்களிடம் விளக்கியதாக வாடிக்கையாளர்கள் கூறினர்.
நொவீனாவில் உள்ள 'வெஸ்ட்குளோசட்' கடைக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு நேற்று சென்று பார்த்தபோது அக்கடை மூடப்பட்டிருந்தது.
இவ்வாண்டு தொடக்கத்தில் 'வெஸ்ட்குளோசட்' அதன் செயல்பாடுகளைத் தொடங்கியதாகவும் கடந்த சில மாதங்களாக அது பெரும்பாலும் மூடப்பட்டிருந்ததாகவும் அக்கம்பக்க கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் கூறினர்.

