அக்டோபர் 3ல் நாடாளுமன்றக் கூட்டம்
அடுத்த மாதம் (அக்டோபர்) 3ஆம் தேதி திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று நாடாளுமன்ற அலுவலர் நேற்று அறிவித்தார்.
ஊழியரின் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிய முதலாளிக்கு $100,000 அபராதம்
ரோலர் ஷட்டரின் மோட்டாரை மாற்றிக்கொண்டிருந்தபோது மின்சாரப் பழுதுபார்ப்பு ஊழியர் டோங் பாவ்ரோங் மீது மின்சாரம் பாய்ந்தது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், பின்னர் அங்கு உயிரிழந்தார்.
அவருடைய முதலாளி லீ ஈ டேன் (படம்), இடர் மதிப்பீட்டை முறையாக நடத்தவும் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தவும் தவறியது கண்டறியப்பட்டது.
தம்முடைய ஊழியர்களுக்குப் போதிய தகவல் வழங்கப்பட்டதையும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதையும் உறுதிசெய்ய லீ, 65, தவறினார். வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்ட இவருக்கு நேற்று $100,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், இவருக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ஆடவர்மீது வெந்நீரை ஊற்றியதாக
19 வயது பெண்மீது குற்றச்சாட்டு
சிறப்புத் தேவையுடைய 19 வயது ஆடவர் ஒருவர், ஹோட்டல் அறையில் நால்வரால் துன்புறுத்தப்பட்டார். அவர்மீது வெந்நீரும் ஊற்றப்பட்டதாக மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
அவரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் நால்வரில் ஒருவர், அந்த ஆடவரின் மைலோ பானத்தில் மலத்தைக் கலந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது 'நாசி லெமாக்' உணவில் குழந்தை பவுடரும் வாசனைத் திரவியமும் கலக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆடவர் மைலோ பானத்தையும் உணவையும் உட்கொண்டாரா என்பது பற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
அவரைத் துன்புறுத்தியவர்களில் 17 வயது பெண்ணும் ஒருவர். இவ்வாண்டு ஜனவரி 19ஆம் தேதி காலை
8 மணியளவில் லாவெண்டர் ஸ்திரீட் அருகே டைர்வீட் சாலையில் உள்ள 'ஆர்ட்டன் பூட்டிக்' ஹோட்டலின் அறையில், அந்த ஆடவர்மீது வெந்நீரை ஊற்றியதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, அந்தப் பெண்மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிமன்ற உத்தரவு காரணமாக அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
நால்வரை ஏமாற்றி $1.1 மில்லியனுக்கு மேல் பறித்தவருக்குச் சிறை
நாணய மாற்று தரகு நிறுவனம் ஒன்றில் 2013க்கும் 2015க்கும் இடையே தரகராக வேலை செய்த ஹோங் பான் ஜூ, 51, நான்கு பேரை ஏமாற்றி $1,128,000ஐ பறித்தார்.
அவர்களில் மூவரிடம் $351,080ஐ திருப்பித் தந்துவிட்ட அவருக்கு நேற்று ஆறு ஆண்டு, இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய எண்ணம் கொண்டுள்ள ஹோங்கிற்கு $80,000 பிணை வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

