சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே உறவை வலுப்படுத்த புதிய அமைச்சர்நிலை வட்டமேசை வழிவகுக்கும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். பல துறைகளில் ஒத்துழைப்பதோடு, அதன் மூலம் இருநாடுகளுக்கும் பலன் கிடைக்கும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஐந்து நாள் பயணத்தை முடித்துக்கொண்ட துணைப் பிரதமர் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார். உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம், திறன்களை மேம்படுத்துவது, மின்னிலக்க இணைப்புகள் ஆகியவற்றில் ஒத்துழைக்க இருநாடுகளும் இணக்கம் தெரிவித்துகொண்டன.
துணைப் பிரதமர் வோங், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தகத் தொழில் அமைச்சர் கான் கிம் யோங், போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் ஆகியோர் சிங்கப்பூர் சார்பில் வட்டமேசை மாநாட்டை தொடங்கிவைத்தனர்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வர்த்தகத் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இந்திய தரப்பில் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
மாநாடு ஆண்டுதோறும் இடம்பெறும் என்று திரு வோங் குறிப்பிட்டார். இருநாடுகளும் வழக்கமாக சந்தித்துபேசவும் புதிய துறைகளில் இருதரப்பும் ஒத்துழைக்கவும் இந்த மாநாடு வழிவகுக்கும் என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.

