தன்னுடைய முன்னாள் காதலியை கத்தியால் பலமுறை குத்திக் கொன்ற ஆடவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 37 வயது செங் சியன்ஃபெங்கிற்கு எதிராக நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டது.
சென்றாண்டு பிப்ரவரி 16 அன்று புளோக் 308 ஜூரோங் ஈஸ்ட் ஸ்டிரிட் 32ல் இந்த சம்பவம் நடந்தது.
தன்னுடன் உறவை முறித்துகொண்ட காதலியை பார்ப்பதற்காக செங் அவரது வீட்டுக்கு அருகே காத்துகொண்டிருந்தார். அந்த சமயம் செங் குடிபோதையில் இருந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. நள்ளிரவு தாண்டி செங்கின் முன்னாள் காதலியான தம் மீ யோக் அவ்வழியாக வந்தார். அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. கோபத்தில் கத்தியை எடுத்து மீ யோக்கின் வயற்றிலும் நெஞ்சிலும் செங் குத்தினார். வழிபோக்கர் ஒருவர் தடுக்க முயன்றும் செங் மீ யோக்கை தொடர்ந்து கத்தியால் குத்தினார்.
34 வயதான மீ யோக்கிற்கு குறைந்தது 29 கத்திக் குத்து காயங்கள் ஏற்பட்டன. இதோடு அவருடைய விலா எலும்பில் மூன்று முறிவுகளும் இருந்தன. அவருக்கு அளிக்கப்பட்ட முதலுதவி பலனளிக்கவில்லை.
சீன நாட்டினரான செங் மீது முதலில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவருக்கு மனநோய் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து குற்றச்சாட்டு நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றத்துக்கு குறைக்கப்பட்டது.
செங்கும், மலேசியரான மீ யோக்கும் 2018ல் உறவில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. 2020ல் அவர்கள் இருவரும் பிரிந்தனர். பலமுறை மீ யோக்குடன் மீண்டும் இணைந்துகொள்ள செங் விருப்பம் தெரிவித்தார். ஆனால் மீ யோக் இதற்கு இணங்கவில்லை. மாண்டவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.


