ஊழலுக்கு எதிரான சிங்கப்பூரின் வலுவான நிலைப்பாடு, அதன் முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணியாகும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறினார். துன்பங்களை சிங்கப்பூர் எதிர்கொள்வதற்கு அரசாங்கத்தின் மீது பல ஆண்டுகால நம்பிக்கையும் உதவுவதாக அவர் குறிப்பிட்டார். இஸ்தானாவில் நேற்று நடைபெற்ற லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் (சிபிஐபி) 70வது ஆண்டுநிறைவு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
குற்றமற்ற, நேர்மையான அரசாங்கமே நாட்டின் போட்டித்தன்மையை உணர்த்தும் மிகப் பெரிய சாதக அம்சமாகத் திகழ்ந்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், வெளிப்படையான,நியாயமான விதிமுறைகளால் இங்கு வர்த்தகங்கள் வளமடைவதாகக் கூறினார்.
திறன் தகுதியும் ஆளுமையின் நேர்மை வலியுறுத்தலும் இருப்பதால் சிங்கப்பூரர்கள் தங்களின் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்துவதற்குச் சமமான வாய்ப்புகள் உள்ளன. அதேவேளை, தனிப்பட்ட ஒருவர் மட்டும் பலனடையாது பொதுமக்கள் பலனடையும் வண்ணம் முடிவுகளும் கொள்கைகளும் உறுதியாகின்றன என்ற நம்பிக்கையும் பிறக்கிறது என்றார் அவர்.
உலகிலேயே ஊழல் குறைவாக உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்று பகிர்ந்துகொண்டார் அதிபர் ஹலிமா. ஊழலை நிறுத்துவதற்கும் தண்டனை விதிப்பதற்கும் சிபிஐபி அதன் விசாரணைகளைக் கண்ணியத்துடன் முழுமையாகவும் அச்சத்தை விலக்கியவாறும் நடத்தவேண்டும் என்றார்.
முன்னோடித் தலைவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையே நாட்டின் ஆட்சிமுறையில் விதைத்துள்ள வலுவான நம்பிக்கையைப் பாதுகாப்பதும் தக்கவைத்துக்கொள்வதும் இன்றையத் தலைவர்கள் மற்றும் ஒவ்வொரு சிங்கப்பூரரின் பொறுப்பாகும் என்று கூறினார்.
"அனைவராலும் பகிர்ந்துகொள்ளப்படும் இந்தப் பொறுப்பில் சிபிஐபி முக்கியப் பங்காற்றி வருகிறது, தொடர்ந்து பங்காற்றும். அது நம் அரசாங்கத் துறையின் கண்ணியத்தைக் கடுமையாகப் பாதுகாக்க வேண்டும். சிங்கப்பூரின் குற்றமற்ற நிலையைத் தற்காத்திட வேண்டும்," என்றார் திருவாட்டி ஹலிமா.
இதற்கிடையே, அரசியல் தலையீடோ பழிவாங்கும் அச்சமோ இன்றி யாரை வேண்டுமானாலும் விசாரிக்கும் உரிமை சிபிஐபிக்கு உண்டு என்று விளக்கினார் அவர்.
நேற்றைய நிகழ்வில் 120 பேருடன் பிரதமர் லீ சியன் லூங், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

