பயங்கரவாத எதிர்ப்புச் செயல்பாடு, உளவுத்துறை ரீதியான தகவல் பகிர்வு ஆகியவற்றின் தொடர்பில் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சிங்கப்பூரில் புதிய வளாகம் ஒன்று நேற்று திறக்கப்பட்டது. சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சு இந்த பயங்கரவாத எதிர்ப்பு தகவல் வளாகத்தைத் தொடங்கியுள்ளது.
பலதரப்பு, அனைத்து அமைப்பு வளாகமாகச் செயல்படும் இவ்விடத்தில், ஒத்த சிந்தனையுடைய நாடுகள் கூடி வேவுத்துறை தகவல்களைப் பகிர்ந்துகொள்வதுடன் வட்டாரத்தில் நிகழக்கூடிய பயங்கரவாதத்துக்கு எதிராக முன்கூட்டியே எச்சரிக்கையும் விடுக்கலாம் என்றது தற்காப்பு அமைச்சு.
வட்டாரப் பாதுகாப்பு காரணங்கள் கருதி வளாகத்தின் செயல்பாடுகளைப் பற்றி அதிகம் விவரிக்க முடியாவிட்டாலும் கூட்டு உளவுத்துறை தகவல்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி பயங்கரவாதத்தை எதிர்க்கும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கு வளாகம் முக்கியப் பங்காற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
வளாகம் சாங்கி பகுதியில் அமைந்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார். வளாகத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர், பயங்கரவாதக் கட்டமைப்புகள் மிக நுட்பமான முறையில் இயங்கத் தொடங்கி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனால் பயங்கரவாத மிரட்டல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார் அவர்.
வளாகம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் செயல்படத் தொடங்கியதாகக் கூறிய டாக்டர் இங், அதன் பங்காளிகளின் மதிப்புமிக்க பங்களிப்புகளால் மட்டுமே இது சாத்தியமானது என்றார். இது பயங்கரவாதத்துக்கு எதிராக வட்டார நாடுகளின் ஒருமித்த முடிவைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.
நாடுகடந்த பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராகச் செயல்படுவதே சிங்கப்பூர் ஆயுதப் படையின் முக்கியக் குறிக்கோளாக இருந்துவருவதாக டாக்டர் இங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூறினார்.
ஆசியானின் கூட்டு உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு ஆற்றலை வளர்க்க இந்த வளாகம் அமைக்கப்பட்டது என்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து இது முன்னெச்சரிக்கை விடுக்கும் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வட்டார நாடுகளில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என நாம் எதிர்பார்க்கலாம் என்று நேற்றைய நிகழ்வில் டாக்டர் இங் குறிப்பிட்டார்.
"பயங்கரவாதத்துக்கு எதிரான நம் முயற்சிகளை ஒட்டுமொத்தமாக நாம் மீண்டும் இருமடங்காக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் அறிந்ததைப் பகிர்ந்துகொள்ளும்போது வட்டாரப் போக்குகளை நம்மால் மேலும் நன்கு புரிந்துகொள்ள முடியும்," என்று சுட்டினார் டாக்டர் இங்.

