ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் முன்னெப்போதும் இல்லாததைக் காட்டிலும் தற்போது இன்றியமையாததாக விளங்க உலகம் எதிர்நோக்கும் சிக்கல் நிறைந்த சவால்களே காரணம் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் போன்ற சிறிய நாடு
களுக்காகக் குரல் கொடுப்பதோடு உலகில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்தும் முயற்சிகளில் இதுபோன்ற நாடுகளுக்கு ஐநா இடம் கொடுத்து வருகிறது என்று அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஐநா உலக மன்றத்தில் இடம்பெறத் தொடங்கி 57 ஆண்டுகள் ஆன நிலையில், விதிகளின் அடிப்
படையில் அமைந்த அந்த மன்றத்தின் கொள்கைகளுக்கு இணங்கவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் பொது மனப்பான்மையுடனும் சிங்கப்பூர் திகழ்ந்து வருவதாக திரு லீ கூறியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை தொடங்கிய ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் 150 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்றுள்ளனர்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு நியூயார்க் நகரின் ஐநா தலைமையகத்தில் இவர்கள் நேரடியாக கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிங்கப்பூரைப் பிரதிநிதித்து கூட்டத்தில் கலந்துகொள்ளும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், உயர்மட்ட பொது விவாத அரங்கில் சிங்கப்பூரின் அறிக்கையை வெளியிட்டுப் பேச இருக்கிறார். வரும் ஞாயிறு வரை டாக்டர் விவியன் கூட்டத்தில் பங்கேற்பார்.
இந்நிலையில், ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ள பிரதமர் லீ, பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் புவிசார் அரசியல் பதற்றங்கள், வளர்ந்து வரும் தன்னைப்பேணித்
தனம் ஆகியவற்றுக்கு மத்தியில் உலக நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தை கொவிட்-19 கொள்ளைநோய் நினைவூட்டி இருப்பதாகக் கூறியுள்ளார்.
"ஐநா போன்ற அமைப்புகள் இதற்கு முன்னர் இல்லாத முக்கியத்துவத்தைத் தற்போது பெற்றுள்ளன.
"நிலையான அனைத்துலகச் சூழலை உருவாக்க நாடுகள் ஒன்றிணைவதற்கான தளத்தை அவை உருவாக்கி உள்ளன," என்றார் திரு லீ.
இதற்கிடையே, இதில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில், 1965ல் சுதந்திரம் பெற்றது முதல் ஐநாவையும் அதன் சாசனத்தையும் சிங்கப்பூர் வலுவாக ஆதரித்து வருவதாக ஐநாவுக்கான சிங்கப்பூர் தூதர் பர்ஹான் கஃபூர் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறிய நாடு என்ற முறையில் ஐநாவின் முயற்சிகள் வெற்றி காண்பதில் சிங்கப்பூர் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் திரு கஃபூர் தமது காணொளிப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

