பல்வேறு வகையான கொவிட்-19 கிருமிகளுக்கு எதிரான தடுப்பாற்றல் ஒருவருக்கு உள்ளதா என்பதைக் கண்டறியும் புதிய ரத்தப் பரிசோதனை முறை சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதற்கு, விரலைக் குத்தி ரத்தத்தைப் பரிசோதித்தால் போதும். வெறும் 10 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் தெரிந்துவிடும்.
தற்போது ஆய்வுக்கூடச் சோதனைகளின்வழி ஒருவருக்கு கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பாற்றல் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். ஆய்வு முடிவுகள் தெரிவதற்கு 24 மணிநேரம் முதல் 72 மணிநேரம் வரை பிடிக்கும்.
மேலும், ஆய்வு முடிவுகள் 93 விழுக்காடு சரியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
ஆய்வுத் தொழில்நுட்பத்துக்கான சிங்கப்பூர்-எம்ஐடி கூட்டணி (ஸ்மார்ட்), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் புதிய ரத்த பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளனர். 'ஸ்மார்ட்' அமைப்பு, அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் நடத்தி வரும் ஆய்வு நிறுவனமாகும்.
முதன்முதலில் உருவான கொவிட்-19 கிருமி, அதன் டெல்டா, ஓமிக்ரான் வகைகள் போன்றவற்றை உண்டாக்கும் சார்ஸ்-சிஓவி2 கிருமியை செயலிழக்கச் செய்யும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் எந்த அளவுக்கு உடலில் உள்ளன என்பது புதிய முறை கண்டறியும்.
வருங்காலத்தில் வேறு வகைக் கிருமிகளுக்கும் வேறு நோய்களுக்கும் எதிரான தடுப்பாற்றலைத் தெரிந்துகொள்ள இப்புதிய முறையை மாற்றி அமைக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
'மைக்ரோபயோலஜி ஸ்பெக்ட்ரம்' எனும் அறிவியல் ஆய்விதழில் இம்மாதம் 7ஆம் தேதி இது பற்றி தெரிவிக்கப்பட்டது.
ஒருவரின் உடல்நிலைக்கு ஏற்ப தடுப்பு மருந்துகளைச் செலுத்த இந்தப் புதிய முறை வழிவிடும். அதாவது, ஒருவரின் உடலில் எவ்வளவு நோய் எதிர்ப்புப் பொருள்கள் உள்ளன, அவரது உடலில் தடுப்பாற்றல் எந்த அளவுக்கு செயல் படுகிறது என்பதைச் சோதித்து அவருக்கு தடுப்பூசிகளையும் கூடுதல் தடுப்பூசிகளையும் வழங்க முடியும்.

