வாகனம் ஓட்டுவதற்கான தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் மற்றொரு நபரை தேர்வு எழுத வைத்த மலேசியருக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கோ ஹா ஹோக் தனக்குப் பதிலாக மற்றொருவரை தேர்வு எழுத வைத்தார்.
தேர்வு எழுதியவரிடம் முகக்கவசத்தை அகற்றுமாறு அதிகாரி கூறியபோது ஆள்மாறாட்டம் பற்றி தெரியவந்தது. கோவின் ஒர்க் பர்மிட்டில் உள்ள புகைப்படத்துடன் தேர்வு எழுதியவரின் முகம் ஒத்துப் போகவில்லை.
கோவுக்கு, 52, நேற்று இரண்டு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஷாங் ஷோங்லியாங் என்பவருடன் சேர்ந்து மோசடி செய்த குற்றத்தை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கடந்த ஜூன் மாதம் எண் 2 உட்லண்ட்ஸ் இண்டஸ்டிரியல் பார்க் 4ல் உள்ள சிங்கப்பூர் சேஃப்டி டிரைவிங் சென்டரில் (எஸ்எஸ்டிசி) இந்தச் சம்பவம் நடைபெற்றது.
அவரது குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஷாங்குக்கு கடந்த ஜூலை 21ஆம் தேதி இரண்டு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு வாகனங்களை ஓட்டுவதற்கு ஜூலையில் தடை விதிக்கப்படும் என்று கோ நினைத்தார். அந்த சமயத்தில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிய அவர், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட தனது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி வந்தார்.
சிங்கப்பூரில் நீண்டகாலம் பணியாற்ற வேண்டியிருந்ததால் அவர் சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிளை வாங்கி தனது மலேசிய வாகன உரிமத்தை சிங்கப்பூர் உரிமமாக மாற்ற முடிவு செய்தார்.
ஆனால் அடிப்படை எழுத்துத் தேர்வுக்கு அவர் அஞ்சினார்.
இதனால் தனது நண்பர் ஒருவர் மூலம் முன்பின் அறியாத முகவரிடம் மற்றொருவரை தேர்வு எழுத ஏற் பாடு செய்தார். அதற்கு 500 வெள்ளி கொடுக்கவும் அவர் முன் வந்தார்.
இவ்வாண்டு ஜூன் 28ஆம் தேதி கோ, எஸ்எஸ்டிசிக்கு வெளியே முகவரைச் சந்தித்து 500 வெள்ளி கொடுத்தார். அப்போது அவருக்குப் பதிலாக மற்றொருவர் தேர்வு எழுதுவார் என முகவர் உறுதியளித் தார்.
இதன் பின்னர் காப்பிக் கடையில் கோ காத்திருந்தார்.
இதற்கிடையே சீன நாட்டவரான ஷாங் முகவரிடம் 200 வெள்ளி பெற்று தேர்வு எழுத ஒப்புக் கொண்டார்.
தேர்வு நாளான ஜூன் 28ஆம் தேதி தேர்வு அதிகாரி கோவின் பெயரை குறிப்பிட்டு அழைத்தபோது ஷாங் பதிலளித்தார்.
முகக்கவசத்தை அகற்ற தேர்வு அதிகாரி கூறினார். அப்போது முகம் மாறுபட்டு இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த அதி காரி அவரது ஆவணங்களை சோதனையிட்டார். இதையடுத்து அவர்களுடைய கூட்டு மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

