போதைமருந்து உட்கொண்டு தாயையும் பாட்டியையும் கொன்ற ஆடவர் காலவரம்பின்றி தடுத்து வைக்கப்படுவார்

போதைமருந்து உட்கொண்டு தாயையும் பாட்டியையும் கொன்ற ஆடவர் காலவரம்பின்றி தடுத்து வைக்கப்படுவார்

2 mins read
ee613e25-1159-4399-b0f3-8c3f4dc13351
2019 அக்டோபரில் கைதானபோது கேப்ரியல் லியன் கோ. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ -

எல்எஸ்டி போதைமருந்தை உட்கொண்டுவிட்டு தாயையும் பாட்டியையும் கொன்ற ஆடவர் காலவரம்பின்றி தடுத்து வைக்கப்படுவார்.

25 வயது கேப்ரியல் லியன் கோ குற்றவாளி என்று உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப். 23) அன்று தீர்ப்பளித்தது.

ஆனால் குற்றம் புரியும் நோக்கத்துடன் கொலை செய்த இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் அவரை விடுவித்தது.

எல்எஸ்டி போதைமருந்தை உட்கொண்ட கோ, கொலை செய்தபோது திடமான மனநிலையில் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.

2019ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி இரவு 7.25 மணிக்கு பிளோக் 7ஏ காமன்வெல்த் அவென்யூவில் கொலைச்சம்பவம் நடந்தது.

அன்று மதியம் இரண்டு முறை போதைமருந்தை உண்டகொண்ட கோ, வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு கையில் கத்தியுடன் திரும்பினார்.

தமது அறைக்கு வந்த தமது அம்மாவை நெஞ்சுப் பகுதியிலும் தலையிலும் கத்தியால் குத்தினார்.

தப்பிக்க முயன்ற பாட்டியை கோ பல முறை தலையில் குத்தினார்.

அவரைத் தடுத்து நிறுத்த முயன்ற அண்டைவீட்டுக்காரரையும் கோ பல முறை தாக்கினார்.

கோவின் தாயாரும் பாட்டியும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக பின்னர் உதவிக்கு வந்த குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.

சட்ட அமைச்சரின் உத்தரவு வரும்வரை சாங்கி சிறைச்சாலையில் கோவை தடுத்து வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

அவரைச் சிறைச்சாலையில் அல்லது மனநலக் காப்பகத்தில் அல்லது பாதுகாப்பான வேறு இடத்தில் தங்கவைப்பது பற்றி சட்ட அமைச்சர் முடிவெடுப்பார்.