'ஹம்மிங்பர்ட் பயோசயன்ஸ்' நிறுவனம் திறப்பு

'ஹம்மிங்பர்ட் பயோசயன்ஸ்' நிறுவனம் திறப்பு

2 mins read
dd151fcc-0645-4a6b-850c-ab4abd326626
-
Google News Preferred Icon

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட உயிர்மருத்துவத் துறையின் புதிய நிறுவனம் ஹம்மிங்பர்ட் பயோசயன்ஸ். இது புற்றுநோய்க்கு எதிரான நோய்எதிர்ப்புப் பொருளைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தது.

தனது அறிவியல், ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்த இந்நிறுவனம் புதிய கிளையை நேற்று திறந்தது.

அறிவியல் பூங்காவில் 40,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கிளையில் பத்துக்கு மேற்பட்ட ஆக நவீன வசதியுடன் கூடிய உயிர் சிகிச்சை ஆய்வுக்கூடங்கள் உள்ளன.

இவற்றில் பணியாற்ற ஆய்வு அறிவியலாளர்கள், மனிதனுக்குள் மருந்துகளின் ஆற்றலைக் கண்டறியும் மருத்துவ மருந்தியல் மேலாளர்கள் ஆகியோருக்கு வாய்ப்புள்ளது.

நேற்றைய கிளை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 'ஹம்மிங்பர்ட் பயோசயன்ஸ்' நிறுவனம் ஓராண்டுக்குள்ளாகவே 150 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. இப்போது அது புற்றுநோய்க்கும் தன்னுடலை தானே தாக்கும் நோய்க்கும் எதிரான துல்லிய சிகிச்சைகளுக்கான முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.

"இந்த வகை நோய்களுக்கு சிகிச்சையளிப்பது சிரமம். ஆனால், தரவு அறிவியல், அடுத்த தலைமுறை சிகிச்சைகளின் உதவியோடு, நோயாளிகளைக் குணப்படுத்த வாய்ப்புகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள்," என்று திரு ஹெங் அந்நிறுவனத்தின் ஊழியர்களிடம் தெரிவித்தார்.

"உயிர்மருத்துவ அறிவியல் இப்போது சிங்கப்பூரின் உற்பத்திப் பொருளியலில் முக்கிய தூணாக விளங்குகிறது. அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 விழுக்காடு பங்களிப்பை வழங்குவதுடன் கடந்த ஆண்டில் 25,000 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்தது.

"இப்போது சிங்கப்பூரில் 40க்கு மேற்பட்ட உயிர்தொழில்நுட்ப சிகிச்சை வழங்கும் நிறுவனங்கள் உள்ளன. சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட உயிர்தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஆண்டில் $860 மில்லியனைத் திரட்டின.

"கொவிட்-19 பெருந்தொற்று நோய் சூழலிலும் 'ஹம்மிங்பெர்ட் பயோசயன்ஸ்' நிறுவனம் கடந்த ஆண்டில் $177 மில்லியன் நிதியை ஈட்டியது. இதுவே ஆகப்பெரிய உயிர்தொழில்நுட்ப உடன்பாடு ஆகும்," என்றும் துணைப் பிரதமர் ஹெங் கூறினார்.

"உயிர்மருத்துவ துறையில் திறனாளர்களை ஈர்ப்பதில் சிங்கப்பூர் பெரும் ஆர்வம் காட்டியதால், ஹம்மிங்பர்ட் 2015ஆம் ஆண்டில் இங்கு கால்பதிக்க முடிவெடுத்தது. உள்ளூர் மருத்துவமனைகள், ஆய்வுக் கழகங்கள், இதர உயர்கல்வி நிலையங்கள் ஆகியவற்றுடன் ஒத்துழைக்க நாங்கள் விரும்புகிறோம்," என்றார் நிறுவனத்தின் உதவித் தலைவர் டாக்டர் லிசா வீ.