கரிம வெளியேற்றத்தைக் குறைக்க கிராப், செம்ப்கார்ப் நிறுவனங்களின் அறப்பணி

கரிம வெளியேற்றத்தைக் குறைக்க கிராப், செம்ப்கார்ப் நிறுவனங்களின் அறப்பணி

2 mins read
64b88e4a-16a1-427d-99de-9aa899f9d7b9
-

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் எரிசக்தித் தேவைகளில் 4 விழுக்காட்டுக்கு சூரியசக்தியைப் பயன்படுத்தும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில் கிராப் சிங்கப்பூர், செம்ப்கார்ப் நிறுவனங்கள் இணைந்து சாட்டா எனப்படும் சிங்கப்பூர் காசநோய் எதிர்ப்புச் சங்கத் தலைமையகக் கட்டடத்தின் கூரைகளில் சூரியசக்தித் தகடுகளை இலவசமாகப் பொறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

பிடோக்கில் உள்ள அச்சங்கக் கட்டடத்தின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 182 சூரியசக்தித் தகடு களைப் பார்க்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

லாபநோக்கமற்ற அமைப்புகள் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க சூரியசக்தியைப் பயன்படுத்தும் முயற்சிக்கு கிராப் சிங்கப்பூர், செம்ப்கார்ப் நிறுவனங்களின் நன்கொடை கைகொடுத்தது. அந்தச் சூரியசக்தித் தகடுகள் சாட்டா தலைமையகத்தின் வருடாந்திர எரிசக்தித் தேவையிலிருந்து 10 விழுக்காட்டைப் பூர்த்தி செய்கின்றன.

அதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு 500 முதியவர்களுக்கு சளிக்கு எதிரான தடுப்பூசி போடுவதற்கான செலவை ஈடுகட்டுகிறது என்றார் சாட்டா சமூக சுகாதார அமைப்பின் தலைவர் ஸ்டான்லி சியா.

"அந்தச் சூரியசக்தித் தகடுகள் 560 நான்கறை வீவக வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கக்கூடியது. மேலும் அதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் ஒரு மில்லியன் கிலோகிராம் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும். இந்தச் சேமிப்பைக் கொண்டு எங்கள் பயனாளர்களுக்கு நாங்கள் இன்னும் அதிகமான சேவைகளை வழங்க முடியும்," என்றார் திரு சியா.

சாட்டா சமூக சுகாதார அமைப்பு, இதயம், எலும்பு, நாள்பட்ட நோய்கள், கொவிட்-19 கிருமித்தொற்று ஆகியவற்றுக்கு எதிரான சேவைகளை முதியவர்களுக்கு வழங்கி வருகிறது.

சூரியசக்தித் தகடுகளைப் பொருத்தும் பணிக்கு கிராப் நிறுவனத்தின் பசுமைத் திட்டத்தின் மூலம் $300,000க்கு மேற்பட்ட நிதி வாடிக்கையாளர்களிடமிருந்து திரட்டப்பட்டது.

அவர்கள் தங்களின் ஒவ்வொரு கிராப் போக்குவரத்து சவாரி மூலமும் ஒவ்வொரு கிராப்ஃபுட் உணவு விநியோகம் மூலமும் 10 காசை நன்கொடையாக அளித்தனர்.