காலவரம்பின்றி தடுத்து வைக்கப்பட்டார்
புத்தியைப் பேதலிக்கச் செய்யும் எல்எஸ்டி அமிலத்தைப் புழங்கிய ஆடவர் ஒருவர், தன்னுடைய 56 வயது தாயாரை இதயத்தில் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார். 90 வயது பாட்டியையும் குத்திக் கொன்றுவிட்டார்.
அவர் காலவரம்பில்லாமல் தடுத்து வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. கேப்ரியல் லியன் கோ, 25, என்ற அந்த ஆடவர், 2019ஆம் ஆண்டில் அந்தச் செயல்களைச் செய்ததாக நேற்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவருடைய மனநிலையை கருத்தில்கொண்டு அதன் அடிப்படையில் நோக்கமில்லாத மரணம் விளைவித்ததாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
காமன்வெல்த் அவென்யூவில் இருக்கும் புளோக் 7-Aயில் 2019 அக்டோபர் 27ஆம் தேதி இரவு சுமார் 7.25 மணிக்கு அந்த இரண்டு மாதர்களையும் கோ கொன்றுவிட்டார். அப்போது அவர் புத்தி பேதலித்த நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சட்ட அமைச்சரிடம் இருந்து உத்தரவுகள் வரும்வரை அந்த ஆடவரை சாங்கி சிறைச்சாலை மருத்துவ நிலையத்தில் தடுத்து வைத்து கண்காணிக்கும்படி உத்தரவிட்டார்.
குற்றவியல் நடைமுறை நியதிகளின்படி, இத்தகைய வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர், மனநிலை தொடர்பில் விடுவிக்கப்படும்போது அவரை பாதுகாப்பான கவனிப்பில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் சட்ட அமைச்சரிடம் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
முன்னாள் நிர்வாகத்
தலைவர் மீது குற்றச்சாட்டு
இரண்டு பள்ளிவாசல்களின் முன்னாள் நிர்வாகத் தலைவர் ஒருவர், அந்தப் பள்ளிவாசல்களில் இடம்பெற்ற வேலைகளுக்கான தொகை தொடர்பில் ஒரு நிறுவனத்தின் இயக்குநருக்கு ஆலோசனை கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்குக் கைமாறாக அந்த இயக்குநர், ஒரு பயண நிறுவனத்தைச் சேர்ந்த பங்குகளை அந்த முன்னாள் நிர்வாகிக்குக் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
அப்துல் ரஹீம் மாவாசி, 55, என்ற அந்த முன்னாள் நிர்வாகத் தலைவர் மீது நேற்று ஓர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் 2015ல் பொதுச் சேவை விருது பெற்றவர் என்பது இணையம் மூலம் தெரியவந்தது.
அவருக்கு பங்குகளைக் கொடுத்ததாகக் கூறப்பட்ட ஸியல்-கான் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தின் இயக்குநரான முகம்மது முஸ்டாகிம் காம்@காம் ஹோக் பெங், 64, என்பவர் மீதும் நேற்று ஓர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த இருவரும் அக்டோபர் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவார்கள்.
குற்றங்களை ஒப்புக்கொண்டார்
கப்பல் நிர்வாக நிறுவனம் ஒன்றில் இயக்குநராக வேலை பார்த்த ஒருவர், சட்டவிரோதமான முறையில் பணத்தைப் பெறுவதற்கான உடன்பாடு ஒன்றில் ஈடுபட்டார்.
இந்திய நாட்டவரான அனந்தகிருஷ்ணன் நந்தா, 51, என்ற அந்த முன்னாள் இயக்குநர், ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரிலும் இதர இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரிலும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதனையடுத்து அவர் அந்தக் குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றச்செயல்கள் 2015ல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அனந்தகிருஷ்ணன் 2023 பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவார்.

