அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இந்த நிலையில், உள்ளூர் வங்கிகளான யுஓபி, டிபிஎஸ் ஆகியவை தங்கள் நிலை வட்டி விகித வீட்டுக் கடன்களைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.
அத்தகைய கடன்களுக்கான வட்டி விகிதங்களை அவை மறுபரிசீலனை செய்து வருகின்றன.
யுஓபி வங்கி, தன்னுடைய இப்போதைய ஈராண்டு, மூவாண்டு நிலை வட்டி விகித கடன் ஏற்பாடுகளை இப்போதைக்கு நிறுத்தும் என்று அந்த வங்கியின் பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
யுஓபி வங்கி சந்தை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் வீட்டுக் கடன் ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய்யும் என்றும் பேச்சாளர் கூறினார்.
அத்தகைய கடன்கள் போட்டித்திறன் மிக்கவையாகவும் வீடு வாங்குவோரின் தேவைகளை நிறைவேற்றுபவையாகவும் இருந்து வருவது அதன் மூலம் உறுதிப்படுத்தப்படும் என்றார் அவர்.
யுஓபி வங்கி இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய ஈராண்டு, மூவாண்டு நிலை வட்டி கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஏற்றியது. ஈராண்டு நிலை வட்டி கடன்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2.98% ஆனது.
அதேபோல, மூவாண்டு நிலை வட்டி கடனுக்கான வருடாந்திர வட்டி விகிதம் 3.08% ஆனது.
என்றாலும் தன் நிலை வட்டி விகிதக் கடன் அனைத்தையும் முற்றிலும் அகற்றப்போவதில்லை என்று யுஓபி வங்கி கூறியது.
இதனிடையே, டிபிஎஸ் வங்கியின் நிலை வட்டி விகித கடன் திட்டங்களும் 'ஒன்றில் இரண்டு' வீட்டுக் கடன் திட்டங்களும் வங்கியின் இணையத்தளத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன என்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
இந்த வங்கி கடந்த ஜூன் மாதம் தனது ஈராண்டு, மூவாண்டு நிலை வட்டிவிகித கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாங்குவோருக்குரிய தனது ஐந்தாண்டு நிலை வட்டி விகித கடன் திட்டத்தை இது அகற்றியது.
இந்தத் திட்டத்தின்படி 2.05% வட்டி விகிதத்தில் கடன்கள் கொடுக்கப்பட்டன.
அப்போது இந்த வங்கி இருவித வட்டி விகிதங்களைக் கொண்ட ஒரு கடன் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறைப்படி வீடு வாங்குவோருக்கு நிலை வட்டி விகித, மாறு வட்டி விகித ஏற்பாட்டில் கடன் கிடைக்கும்.
இதனிடையே, ஓசிபிசி வங்கி தனது வீட்டுக்கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைத் தொடர்ந்து காலக்கிரம முறைப்படி மறுபரிசீலனை செய்து வருகிறது. தன்னுடைய கடன் திட்டங்கள் போட்டித்திறன் மிக்கவையாக இருக்கின்றன என்பதை அதன் மூலம் வங்கி உறுதிப்படுத்துகிறது.
ஓசிபிசி வங்கி இப்போது ஈராண்டு நிலை வட்டி விகித கடன் திட்டத்தைக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் 2.98% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இதன் இணையத் தளம் தெரிவிக்கிறது.