வழக்கறிஞரும் எதிர்த்தரப்பு அரசியல்வாதியுமான லிம் தியென் (படம்) பல குற்றச்சாட்டுகளை ஏற்கெனவே எதிர்நோக்குகிறார்.
அவர் மீது நேற்று புதிதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அரசாங்க ஊழியருக்குப் பதில் அளிக்க தவறியதாகவும் வழக்கறிஞர் என்ற முறையில் நம்பிக்கை மோசடி செய்ததாகவும் புதிய குற்றச்சாட்டுகள் கூறுகின்றன.
'ஏஎக்ஸ்ஏ இன்சூரன்ஸ்' என்ற நிறுவனம், வழக்கறிஞர் என்ற முறையில் அவரிடம் $5,500 தொகையை ஒப்படைத்து இருந்தது. அவர் அதை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி தவறாகக் கையாண்டுவிட்டார் என்று நேற்று சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளில் ஒன்று கூறுகிறது.
லிம், இந்த ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி நார்த் பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் வர்த்தகக் குற்றப் பிரிவின் அலுவலகத்தில் இருந்தபோது, அந்தப் பிரிவின் அதிகாரி ஒருவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூற அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வழக்கறிஞர் லிம், 'கார்சன் லா சேம்பர்ஸ்' என்ற நிறுவனத்தின் உரிமையாளர் என்பது சட்ட அமைச்சின் இணையத்தளம் மூலம் தெரிகிறது.
லிம் தியென் மீது கடந்த மே மாதம் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வழக்கறிஞர் என்ற முறையில் நம்பிக்கை மோசடி செய்தது; செல்லுபடியாகக்கூடிய தொழில் சான்றிதழ் இல்லாமல் வழக்கறிஞராக அல்லது சட்ட முகவராக (சொலிசிடராக) செயல்பட்டது; சட்டவிரோத முறையில் ஆபாச குறுந்தகவல்களைத் திரும்பத்திரும்ப அனுப்பி தொல்லை கொடுத்தது ஆகியவை அவற்றில் அடங்கும்.
வழக்கிற்கு முந்திய கலந்துரை யாடலுக்காக அக்டோபர் 21ஆம் தேதிக்கு லிம்மின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

