மோசடிக்காரர்களிடம் சிக்கி முதியோர் பணத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக ஓசிபிசி வங்கி பயிலரங்கை நடத்துகிறது. இணைய மோசடிகளில் சிக்கி பணத்தைப் பறிகொடுத்தவர்களே அந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு பாதுகாப்பு பற்றி பலவற்றையும் போதிக்கிறார்கள்.
எப்படி எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள்; மோசடிப் பேர்வழிகளின் வலையில் விழாமல் எப்படி தப்பிப்பது என்பது எல்லாம் முதியோருக்கு, அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துக் கூறப்படுகிறது.
தெம்பனிஸ் ஓசிபிசி கிளையில் இடம்பெற்ற அந்தப் பயிலரங்கில் மின்னிலக்க வங்கி முறை பற்றி முதியோர் ஒவ்வொருவருக்கும் நேரடி பயிற்சியும் அளிக்கப்பட்டது.
அங் மோ கியோ, பிடோக், பாசிர் ரிஸ், தியோங் பாரு, தோ பாயோவில் உள்ள ஓசிபிசி வங்கிக் கிளைகளில் பயிலரங்கு நடக்கும். அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் 400 முதிய வாடிக்கையாளர்களை எட்டிவிட வேண்டும் என்பது இலக்கு.

