சிங்கப்பூரில் அதிகரிக்கும் சம்பள இடைவெளிப் பிரச்சினையைச் சமாளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதேவேளையில், குறைந்த வருவாய் ஊழியரின் சம்பளத்தை உயர்த்துவதற்கு வலியில்லாத எளிமையான வழி இல்லை என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தி வருமான இடைவெளி யைக் குறைக்கலாம் என்பது ஒரு யோசனை. ஆனால், அத்தகைய முயற்சி காரணமாக நிறுவனங்கள் குறைவான ஊழியர்களையே வேலையில் அமர்த்த நேரிடும் என்று அவர் தெரிவித்தார்.
ஆக அதிக குறைந்தபட்ச வருவாய் ஏற்பாட்டைக் கொண்டிருக்கும் சில நாடுகளில் அதிக வருமான இடைவெளியும் அதிக வேலையின்மை விகிதம் நிலவுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகையால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எளிமையான வலியில்லாத வழி எதுவும் இல்லை. தீர்வுகளைக் கையாளும்போது எப்போதுமே மிகக் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது என்றாரவர்.
முன்னேறும் சிங்கப்பூர் இயக்கத்தின் ஓர் அங்கமாக நேற்று குறை வருவாய் ஊழியர்களுக்கான செயல் அணியின் மூன்றாவது பயிலரங்கு நடந்தது. அதில் துணைப் பிரதமர் உரையாற்றினார்.
சிங்கப்பூரில் குறைந்த வருவாய் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமை என்றும் துணைப் பிரதமர் கூறினார்.
அத்தகைய ஊழியர்களை மேம்படுத்துவதற்கு ஏராளமான வளங்களை அரசாங்கம் ஒதுக்குவதற்கு இதுவே காரணம் என்று நிதி அமைச்சருமான திரு வோங் தெரி வித்தார். குறைந்த வருவாய் ஊழியர்களை மேம்படுத்தி அதன்மூலம் வேலையிடங்களில் வருமான இடைவெளியைக் குறைக்கலாம் என்று அரசாங்கம் நம்புகிறது.
படிப்படியான சம்பள உயர்வு, ஒர்க்ஃபேர் ஏற்பாடு ஆகியவை மூலம் குறைந்த வருவாய் ஊழியர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். வேலை முழுவதும் வாழ்க்கைத் தொழிலில் அவர்கள் தொடர்ந்து மேம்படவும் வழிகள் இருக்கும் என்று அவர் கூறினார்.
அரசாங்கம், முதலாளிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், ஊழியர்கள் ஆகியோருடன் சேர்ந்து முத்தரப்பு ஏற்பாட்டில் செயல்படும்அணுகுமுறை மூலம் நிலையான தீர்வுகள் ஏற்பட்டு விரும்பிய பலன்கள் கிடைக்கும் என்றார் அவர்.
குறைந்த வருமான ஊழியர்களைப் பொறுத்தவரை வேலைஇடங்களில் வாய்ப்புகள், திறன் பயிற்சி, திறன் மேம்பாடு, வேலையிட நிலவரங்கள் போன்ற இதர பல அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டி இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பயிலரங்கில் கலந்துகொண்ட மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, குறைந்த வருவாய் ஊழியர் சம்பளத்தைக் கூட்ட ஏற்கெனவே ஒருசில கொள்கைகள் நடப்பில் இருப்பதைச் சுட்டினார்.

