பொன்மணி உதயகுமார்
பெண்கள் தங்கள் விருப்பதிற்கேற்ப முடிவுகளை எடுப்பதற்கும் நிதி சார்ந்த சுதந்திரம் பெறுவதற்கும் நிதித்துறை பற்றிய அறிவு அவசியம் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி; நிதி இரண்டாம் அமைச்சருமான இந்தி ராணி ராஜா நேற்று நடந்த 'மணி ஐடியாஸ்' நிதியறிவுப் பயிலரங்கில் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் நிதித்துறை அறிவு ஒவ்வொரு வயதினருக்கும் எவ்வாறு பொருந்தும் என்பதை அமைச்சர் பகிர்ந்துகொண்டார்.
ஆசிய வட்டாரத்தைப் பொறுத்த வரை, சிங்கப்பூரில் 80 விழுக்காட்டி னர் ஏதோ ஒரு முறையில் சேமிப்பு களையோ அவசர நிதியையோ ஒதுக்க திட்டமிட்டுள்ளார்கள் என்பது தனக்கு மனநிறைவை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
சிறுவயதிலிருந்தே சேமிப்புத் திட்டங்களைப் பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குப் பயனளிக்கும் என்று அவர் கூறினார்.
சேமிப்புகளைச் விவேகமாகச் செலவிடுவதும் கணக்கு வைத்துக் கொள்வதும் பதின்ம வயதினருக்கு வருங்காலத்தில் நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.
அண்மையில் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ள இளையர்கள் தங்கள் சேமிப்புகளைப் பெருக்க திட்டமிட வேண்டும் என்று கூறிய அமைச்சர், குறிப்பாக மற்றவர்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க சுயமாக நிதி வசதிகளை பெண்கள் அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரை பொறுத்தவரை ஆண்களைவிட பெண்கள் நீண்ட ஆயுளைக் கொண்டு உள்ளதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இதனால் பெண்கள் நிதி சார்ந்த சுதந்திரம் பெற்று சுயமாக தங்களைப் பார்த்துக்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் இந்திராணி தெரிவித்தார்.
ஒவ்வொருவரும் தங்கள் நிதி வசதிக்கேற்ப செலவிடுவது, மத்திய சேம நிதியைப் பற்றி அறிந்து கொள்வது, மேற்படிப்புக்காகத் திட்டமிட்டுவது, ஒய்வுபெறும் காலத்திற்குத் தேவையான நிதியை ஒதுக்குவது போன்றவற்றின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
சிண்டா நடத்தி வரும் நிதியறிவு சார்ந்த சமூக நிகழ்ச்சிகள், இணையத்தில் இருக்கும் நம்பிக்கையான தளங்கள், பள்ளிகளில் மாணவர்களுக்காக நடத்தப்படும் பயிலரங்குகள் போன்றவற்றைப் பயன்படுத்தி மக்கள் தங்களது நிதியறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் இந்திராணி ராஜா ஊக்குவித்தார்.

