வெளிநாடுகளில் சட்டவிரோமாக போதைப்பொருளை புழங்கிய சந்தேகத்தின் பேரில், பல சோதனைச்சாவடிகளிலும் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 41 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் கைதாயினர்.
அப்படிக் கைதானவர்களின் எண்ணிக்கை, கொவிட்-19க்கு முந்திய அளவைவிட குறைவு என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தொற்றுக் காரணமாக எல்லைகள் மூடப்பட்டு இருந்ததே இதற்குக் காரணம்.
கைதானவர்களில் பெரும்பாலானோர் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் வெளிநாடுகளில் போதைப்பொருளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தினால் அவர்கள் அந்தக் குற்றத்தை சிங்கப்பூருக்குள் செய்ததாகவே கருதப்பட்டு போதைப்பொருள் தவறான பயனீட்டுச் சட்டத்தின்கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக குற்றம் செய்திருப்போருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரைப்பட்ட சிறைத்தண்டனை விதிக்க முடியும். $20,000 வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது.
குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்காதோருக்குப் பெரும்பாலும் சிறைத்தண்டனை விதிக்கப்படாது என்று இந்தப் பிரிவு தெரி வித்தது. அத்தகையோர் சீர்திருத்த நடைமுறையில் ஈடுபடுத்தப்படுவர்.
நேரடி கண்காணிப்புச் செயல்திட்டங்களின்கீழ் அவர்கள் வைக்கப்படலாம்; போதைப்பொருள் மறுவாழ்வு பயிற்சிக்கு அல்லது சிகிச்சைக்கு அனுப்பப்படலாம்.

