15 ஆண்டுகாலம் மறைந்திருந்த முன்னாள் வழக்கறிஞர் கைது
பதினைந்து ஆண்டு காலம் பிடிபடாமல் இருந்து வந்த முன்னாள் வழக்கறிஞர் ஒருவர் கைதானார். அவர் மீது நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
டேவிட் கோங் சியாக் மெங் என்ற அந்த முன்னாள் வழக்கறிஞர், சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் திரும்பினார்.
அவரை வர்த்தக விவகாரப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அந்த 55 வயது சிங்கப்பூரர், டேவிட் கோங்& அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். வழக்கறிஞராக தொழில் நடத்தினார்.
அவர் 2007ஆம் ஆண்டில் சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டார். அந்த முன்னாள் வழக்கறிஞர் தன் வாடிக்கையாளரின் $88,000 பணத்தைக் கையாடி விட்டதாக முன்பு புகார் தெரிவிக்கப்பட்டது. அவரைக் கைது செய்ய உத்தரவும் உலக காவல்துறை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் நேற்று தெரிவித்தது.
மின்னிலக்க வங்கி: முதியோருக்கு பயிலரங்கு நடத்தும் ஓசிபிசி
மோசடிக்காரர்களிடம் சிக்கி முதியோர் பணத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக ஓசிபிசி வங்கி பயிலரங்கை நடத்துகிறது. இணைய மோசடிகளில் சிக்கி பணத்தைப் பறிகொடுத்தவர்களே அந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு பாதுகாப்பு பற்றி பலவற்றையும் போதிக்கிறார்கள்.
எப்படி எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள்; மோசடிப் பேர்வழிகளின் வலையில் விழாமல் எப்படி தப்பிப்பது என்பது எல்லாம் முதியோருக்கு, அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துக் கூறப்படுகிறது.
தெம்பனிஸ் ஒசிபிசி கிளையில் இடம்பெற்ற அந்தப் பயிலரங்கில் மின்னிலக்க வங்கி முறை பற்றி முதியோர் ஒவ்வொருவருக்கும் நேரடிப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
அங் மோ கியோ, பிடோக், பாசிர் ரிஸ், தியோங் பாரு, தோ பாயோவில் உள்ள இந்த வங்கிக் கிளையிலும் பயிலரங்கு நடக்கும். அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் 400 முதிய வாடிக்கையாளர்களை எட்டிவிட வேண்டும் என்பது இலக்கு.
ஆஸ்திரேலிய பயிற்சியில் 4,040க்கும் மேற்பட்ட வீரர்கள்
சிங்கப்பூர் ஆயுதப் படைகள் அதன் ஆகப் பெரிய வெளிநாட்டுப் பயிற்சியை முற்றிலுமாக மீண்டும் தொடங்குகிறது. அதனையொட்டி 4,040க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் படைவீரர்கள் ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 'எக்சர்சைஸ் வல்லாபே' என்ற அந்தப் பயிற்சி ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடக்கிறது.
ராணுவம், கடற்படை, ஆகாயப்படை ஆகிய முப்படைகளையும் சேர்ந்த படைவீரர்கள் அதில் ஈடுபடுவார்கள். அந்தப் பயிற்சி நடக்கும் வட்டாரம் சிங்கப்பூரை போல நான்கு மடங்கு பெரியது.
ஆஸ்திரேலியாவில் குவீன்ஸ்லாந்தில் ஷோல்வாட்டர் பே என்ற இடத்தில் பயிற்சி நடக்கும் என்று தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.

