இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கைமாறிய குறைந்தபட்சம் தலா $1 மில்லியன் விலையுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை, சென்ற ஆண்டு முழுமைக்குமான அளவைவிட அதிகமாக இருந்தது.
நேற்றைய தேதி நிலவரப்படி குறைந்தபட்சம் $1 மில்லியன் விலையுள்ள மொத்தம் 266 வீவக மறுவிற்பனை வீடுகள் கைமாறின.
இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு முழுமைக்கும் 259 ஆக இருந்தது. கழகத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் இந்த நிலவரம் தெரியவருகிறது.
வட்டிவிகிதம் கூடினாலும்கூட வீவக மறுவிற்பனைச் சந்தை சுறுசுறுப்பாகவே இருந்து வருகிறது. தொடர்ந்து 26வது மாதமாக மறுவிற்பனை வீட்டு விலைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த ஆண்டில் இதுவரையில் கைமாறிய மில்லியன் வெள்ளி வீடுகள் 266ல் 12 வீடுகள் எக்ஸிகியூட்டிவ் அல்லது மெய்சனெட் வீடுகள் ஆகும். அவை உட்லண்ட்ஸ், ஈசூன், ஹவ்காங், புக்கிட் பாத்தோக் ஆகிய முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளில் அமைந்துள்ளன.
முந்திய ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் இருக்கும் மறுவிற்பனை வீடுகளே இந்த அளவுக்கு விலை போகும்.
பொங்கோல் ஃபீல்டில் உள்ள புளோக் 268C-யில் இருக்கும் 149 சதுர மீட்டர் பரப்பளவுள்ள ஐந்தறை வீடுதான் ஆக அதிகமாக $1.198 மில்லியனுக்கு இந்த மாதம் கைமாறி இருக்கிறது.

