சவால்கள் பல இருந்தாலும் அதிகமான சமூக நிறுவனங்கள் உடற்குறையுள்ள மக்களுக்கு ஆதரவு அளிக்கின்றன.
அத்தகைய மக்களுக்கு ஆதரவு அளிக்கும் சமூக நிறுவனங்களின் விகிதாச்சாரம் 2021ல் 24% ஆக இருந்தது. அது இந்த ஆண்டில் 25.5% ஆக அதிகரித்து இருக்கிறது.
சிங்கப்பூர் சமூக நிறுவன மையத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவருகிறது. இப்போது 93 சமூக நிறுவனங்கள் உடற்குறை உள்ளோரை வேலையில் அமர்த்தியுள்ளன. அவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றன.
உடற்குறையாளர்களுக்குத் தோதான சேவைகளை அவை வழங்குகின்றன. அவர்களுக்குப் பயன்படும் பொருள்களை உருவாக்குகின்றன. சென்ற ஆண்டில் இத்தகைய நிறுவனங்களின் எண்ணிக்கை 90 ஆக இருந்தது.
சிங்கப்பூரில் 'துணைபுரியும் பெருந்திட்டம் 2030' என்ற ஒரு திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் உடற்குறை உள்ளவர்களில் 40 விழுக்காட்டினருக்கு வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பது திட்டத்தின் இலக்கு. இந்த இலக்கு நிறைவேற மேலும் ஏறக்குறைய 10,000 உடற்குறையாளர்களை வேலைகளில் அமர்த்த வேண்டும்.
முதலாளிகள் வேலையிடங்களில் உடற்குறை உள்ளவர்களை வேலையில் அமர்த்த வேண்டிய தேவை இருக்கிறது.
இதனிடையே, 'ஸ்கூல் ஆஃப் கான்செப்ட்ஸ்' என்ற சிறார் செரிவாற்றல் நிலையம் இரண்டு கிளைகளுடன் செயல்படுகிறது. அவற்றில் 20 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஏழு பேர் உடற்குறை உள்ளவர்கள்.
அந்தச் சமூக நிறுவனத்தை திருவாட்டி மின்ட் லிம் என்பவர் நிறுவினார். அந்த நிலையம் 12 வயதுக்குக் குறைந்த சிறாருக்குக் கல்வியறிவுச் செயல்திட்டங்களை அமல்படுத்துகிறது.
நிலையத்தின் ஊழியர்களில் காது கேளாத, கண்பார்வை சரியில்லாத, அறிவுமந்த குறைபாடுகளுடன் கூடியவர்கள் உள்ளனர்.
அவர்களின் மன பலத்தின் அடிப்படையில் நாங்கள் அவர்களை வேலையில் சேர்க்கிறோம். ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு அவர்கள் மிகவும் பலன் தருபவர்களாக மாறுகிறார்கள் என்று திருவாட்டி லிம் கூறினார்.