மழையையும் பொருட்படுத்தாமல் ஏறக்குறைய 3,000 பேர் மஞ்சள் நாடா ஓட்டத்தில் நேற்று கலந்துகொண்டனர்.
முன்னாள் குற்றவாளிகள் திருந்தி வாழ அந்த நிகழ்ச்சி மூலம் அவர்கள் $150,000 திரட்டினர்.
இரண்டாண்டு காலமாக மஞ்சள் நாடா ஓட்டம் நடக்கவில்லை. இந்த ஆண்டு நிகழ்ச்சி '2ஆம் வாய்ப்புக்காக நாங்கள் ஓடுகிறோம்' என்ற கருப்பொருளுடன் நடந்தது.
நேரடியாக பலரும் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சி ஒருபுறம் இருக்க, மெய்நிகர் வாய்ப்பு ஒன்றும் இருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் தங்கள் சொந்த வசதிக்கேற்ப இந்த மாதம் முழுவதும் ஓட்டத்தில் கலந்துகொண்டு நிறைவு செய்யலாம்.
நேற்றைய நேரடியான ஓட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் 6 கி.மீ. அல்லது 10 கி.மீ. பிரிவுகளில் நடக்கலாம் அல்லது ஓடலாம் என வரையறுக்கப்பட்டது.
கொவிட்-19 காரணமாக 3,000 பேர்தான் கலந்துகொள்ளலாம் என்று வரம்பு விதிக்கப்பட்டது. உள்துறைக் குழு நிறுவன பங்காளிகள், தொண்டூழியர்கள், பொதுமக்கள் பலரும் ஓட்டத்தில் கலந்துகொண்டனர்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் கொடியசைத்து ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மெய்நிகர் நிகழ்ச்சி இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. 30ஆம் தேதி வரை நடக்கிறது. அதில் ஏற்கெனவே 2,700 பேர் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம். நீர்நிலைகளில் செல்லலாம், சைக்கிள் ஓட்டலாம். நேற்றைய மஞ்சள் நாடா ஓட்டத்தின் மூலம் பொதுமக்களும் நிறுவனங்களும் மஞ்சள் நாடா நிதிக்கு $150,000 திரட்டினர்.
"இப்போது பல வகை ஓட்டங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
"ஆகையால், ஒவ்வொருவரும் அவற்றில் கலந்துகொண்டு முன்னாள் குற்றவாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆதரவு வழங்க முன்வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," எனக் கூறினார், மஞ்சள் நாடா ஓட்டம் 2022 குழுவின் துணைத் தலைவரும் சாங்கி சிறைச்சாலை வளாக போதைப்பொருள் மறுவாழ்வு நிலைய சூப்ரின்டென் டண்ட்டுமான கோக் வெங் சியூ.