இயற்கை வளம் இல்லாத சிறிய நாடான சிங்கப்பூர் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் விளங்க வேண்டுமானால், அதற்கு நான்கு முக்கிய தொழில்நுட்பப் புத்தாக்க அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்
துள்ளார்.
எரிசக்தி மற்றும் நீடித்த நிலைத்தன்மை, உயிர்மருந்தியல் மற்றும் மருத்துவம், நகர்ப்புற வாழ்வாதாரம், மின்னிலக்க மற்றும் தகவல் புத்தாக்கம் ஆகியவையே அந்த நான்கு அம்சங்கள் என்றார் திரு சான். சிங்கப்பூர் அதன் உயிர்வாழ்வை உறுதிப்படுத்த ஏன் புத்தாக்க வழிகளைக் கையாள வேண்டும் எனும் தலைப்பில் பேசியபோது இவ்வாறு பட்டியலிட்டார். உலகளாவிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் உலகின் எல்லா பகுதிகளுடனும் இணைப்பில் இருக்க வேண்டும். அத்துடன் அதன் கொள்கைகளும் அமைப்புகளும் மக்களைப் புத்தாக்க வழிகளைக் கையாள ஊக்கப்படுத்த வேண்டும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க பேச்சாளர் தொடர் எனும் நிகழ்ச்சியில் நேற்று பேசியபோது விவரித்தார்.
பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பலதுறைத் தொழிற்கல்லூரி, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் என சுமார் 100 பேர் கூடியிருந்த என்யுஎஸ் கலாசார மைய அரங்கில் பேசிய அமைச்சர் சான், "புத்தாக்கம் என்பது மட்டும் முக்கியமல்ல. மாறாக, சமூகத்தை ஒருங்கிணைத்து, அந்தப் புத்தாக்கத்தை வெளிப்படுத்துதல், அப்போது எதிர்கொள்ளக்கூடிய சவால்களைச் சமாளித்து, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது ஆகியவையும்
முக்கியமானவைதான்," என்று விளக்கினார்.
"தொழில்நுட்பத்தைத் தாண்டி, சிங்கப்பூர் உலக நாடுகளுடனான இணைப்பிலும், அது ஆகாயம், கடல், நிலம், தரவு, நிதி, திறன் என எதுவாக இருந்தாலும் அவற்றில் புத்தாக்கத்தைக் கையாள வேண்டும்," என்று சொன்னார்.
வர்த்தகம், தரவு, யோசனைகள் முதலியவற்றில் உலக நாடுகள் ஒன்றுடன் இன்று இணைத்துக் கொள்வதற்கு சிங்கப்பூர் ஒரு முக்கிய பாலமாக இருக்க வேண்டும்," என்றும் திரு சான்
வலியுறுத்தினார்.

