அதிபர் ஹலிமா யாக்கோப், தற்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் திரு ஆங் செங் ஹோக்கை புதிய துணைத் தலைமைச் சட்ட அதிகாரியாக நியமித்துள்ளார்.
அடுத்த மாதம் (அக்டோபர்) 1ஆம் தேதி முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு திரு ஆங் அந்தப் பொறுப்பை வகிப்பார் என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அதேபோல் தற்போது துணைத் தலைமைச் சட்ட அதிகாரியாகப் பதவி வகிக்கும் திரு ஹரிகுமார் நாயர், அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சட்டத் துறையில் இதர உயர்மட்ட பொறுப்புகளைப் பார்க்கையில், தலைமைச் சட்ட அதிகாரி திரு லூசியன் வோங், அதே பொறுப்பில் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்
பட்டுள்ளது.
திரு வோங் இந்தப் பொறுப்பை முதலில் 2017ல் ஏற்றுக்கொண்டார். பின்னர் 2020ல் அவரது பதவிக் காலம் 2023ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை, தலைமைச் சட்ட அதிகாரியாக இருப்பவர் அரசாங்க வழக்கறிஞர் பொறுப்பை வகிப்பார். எந்தக் குற்றம் தொடர்பிலான வழக்கு விசாரணையைத் தொடங்கவும் நடத்தவும் நிறுத்தவும் தலைமைச் சட்ட அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.
மற்றொரு துணைத் தலைமைச் சட்ட அதிகாரியான திரு லயனல் யீயின் பதவி காலமும் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்ந்து அந்தப் பதவியை அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி வரை வகிப்பார்.
திரு யீ, முதலில் 2017ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி துணைத் தலைமைச் சட்ட அதிகாரியாக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் 2020ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி அவரது பதவி காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
"துணைத் தலைமைச் சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆங், உயர் நீதிமன்றத்தில் மதிப்புமிக்க நீதிபதியாக இருப்பவர். சிங்கப்பூரின் சட்டத் துறை மற்றும் குற்றவியல் நீதித் துறை பற்றியும் அவருக்கு ஆழ்ந்த
அனுபவம் உண்டு," என்று திரு வோங் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் திரு நாயரின் சேவையும் பாராட்டப்படுகிறது. சிட்டி ஹாவஸ்ட் வழக்கு, தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் முறைக்கு எதிரான அரசியலமைப்புச் சவால் போன்ற பல்வேறு பிரபலமான வழக்குகளை திரு நாயர் மிகச் சிறப்பாகக் கையாண்டார் என்று திரு வோங் புகழாரம் சூட்டினார்.
திரு நாயர் தமது புதிய பதவியில் மேலும் சிறந்து விளங்க திரு வோங் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

