தொழில்நுட்பர் ஒருவர் ஓராண்டிற்கு மேலாக தம் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்தார். அப்போது அச்சிறுமிக்கு வயது 10க்கும் 11க்கும் இடைப்பட்டிருந்தது.
தம் மாமாவின் உதவியுடன் அச்சிறுமி காவல்துறையிடம் புகார் அளிக்க மேலும் நான்கு மாதங்கள் ஆகின.
அந்த ஆடவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையையும் 12 பிரம்படிகளையும் உயர் நீதிமன்றம் நேற்று விதித்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்க அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
2019 ஆகஸ்ட்டிற்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தச் சிறுமியிடம் அவர் பாலியல் செயல்களைப் புரிந்தார். இதுபற்றி எவரும் கண்டறியாததை உணர்ந்து துணிச்சல் அடைந்த அவர், தம் செயல்களைத் தீவிரப்படுத்தினார்.
2019 செப்டம்பருக்குப் பிறகு, வாரத்திற்கு ஒருமுறை தம் மகளை அந்த ஆடவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அச்சிறுமிக்கு 11 வயதானவுடன், அந்த ஆடவரின் செயல்கள் மேலும் தீவிரம் அடைந்தன.
2020 மார்ச் 11க்கும் அக்டோபர் 5க்கும் இடைப்பட்ட காலத்திலும் அவரது பாலியல் வன்கொடுமை தொடர்ந்தது.
அச்சிறுமியுடன் அந்த ஆடவர் வீட்டில் தனியாக இருந்தபோது அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்கள் தூங்கிக்கொண்டு இருந்தபோது அவர் பாலியல் செயல்களைப் புரிந்தார்.
தம் மகளுடன் அந்த ஆடவர் ஒருமுறை பாலியல் செயல் புரிந்துகொண்டிருந்தபோது, தம் மனைவி இன்னமும் தூங்கிக்கொண்டு இருக்கிறாரா என்பதைக் கண்டறிய தம்முடைய படுக்கை அறைக்குச் சென்றார்.
மனைவி தூங்கிக்கொண்டு இருந்ததைக் கவனித்த அவர், அச்சிறுமியின் படுக்கையறைக்குத் திரும்பி அவரிடம் பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்தார்.
அவர் மனைவி விழித்து, மகளின் படுக்கையறைக்கு வந்த பிறகே அந்த ஆடவர் தம் செயலை நிறுத்தினார்.
அவரது செயல் குறித்து மனைவி வினவியபோது, அச்சிறுமி கெட்ட கனவு கண்டதாகவும் போர்வையைக் கொண்டு அவரைப் போர்த்தியதாகவும் அந்த ஆடவர் பதிலளித்தார்.
தம் தந்தை பலமுறை தம்மை தவறாக தொட்டதாக அச்சிறுமி தம் தாயாரிடம் கூறினார்.

