2020 வழக்கறிஞர் தேர்வில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டவர்கள், தங்கள் செயல்பாடுகள் குறித்து கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறியுள்ளார்.
வழக்கறிஞராவதற்கான தங்கள் விண்ணப்பங்களை திரும்பப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், சட்டத் தொழிலுக்கு வெளியே தங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடப் போகிறோம் என்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அந்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கறிஞராவதற்கான தங்கள் விண்ணப்பங்களை திரும்பப் பெற்றுக்கொண்ட கடைசி நான்கு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் வேறுபட்டதற்கான காரணத்தையும் தலைமை நீதிபதி மேனன் விளக்கினார்.
விசாரணை தொடங்கியதில் இருந்து மாணவர்களில் இருவரான திரு லிம் ஸி யியும் குமாரி அனபெல் ஆவ் ஜியான் என்னும் ஒத்துழைக்க முன்வந்தனர். எனவே, இவர்களுக்கு குறுகிய காலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குமாரி ஜோலீன் ஓங் ஜியா யி, சிங்கப்பூர் சட்டக் கல்விக் கழகத்தின் விசாரணைக்கு உடனடியாக ஒத்துழைக்கவில்லை. கூடுதல் விசாரணைக்குப் பிறகே தம் முறைகேட்டை அவர் ஒப்புக்கொண்டார். திரு லிம்முடனும் குமாரி ஆவுடனும் தொடர்பு கொண்டதை அவர் தொடக்கத்தில் ஏற்க மறுத்தார். திரு ஷான் வோங் வாய் லூங், தாம் செய்த முறைகேட்டை வெளிப்படுத்தவில்லை.
சட்டத்துறையில் வழிகாட்டுதலுக்காக மதியுரையாளர்களை நாட மாணவர்களிடம் வலியுறுத்திய தலைமை நீதிபதி மேனன், தங்களுடைய முறைகேட்டால் வெளிச்சத்துக்கு வந்த பண்புநெறி சார்ந்த விவகாரங்களுக்கு தீர்வுகாண அவர்கள் வழிமுறைகளைத் தேடுவர் என தாம் நம்புவதாக கூறினார்.
"இழக்கப்பட்ட நம்பிக்கையை மீட்டெடுக்க திரு வோங், குமாரி ஓங், திரு லிம், குமாரி ஆவ் ஆகியோர் உழைப்பர் என நான் நம்புகிறேன்," என்றார் அவர்.

