வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் சேவையில் ஈடுபட்டவருக்குச் சிறை
அமெரிக்க ஆடவரான ஜான் டே-ஹியுன் காயோஹெலோ, பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் 18 வயதுக்குக்கீழ் உடையவர் என்று தெரிந்தும் அவரிடமிருந்து பாலியல் சேவைகளைப் பெற்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி, நார்த் பிரிட்ஜ் சாலை அருகே ஃபிரேசர் ஸ்திரீட்டில் உள்ள டுவோ டவர் அலுவலகக் கட்டடத்தில் இருக்கும் உடற்குறை உள்ளோருக்கான கழிப்பறைக்குச் சென்ற காயோஹெலோவும் அந்தச் சிறுமியும் பாலியல் செயலில் ஈடுபட்டனர். அப்போது 17 வயதான அச்சிறுமி புகலிடத்தில் தங்கியிருந்தார். ஆனால், அவர் ஏன் அங்கு வசித்தார் என்பது பற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
வயது குறைந்த பெண்ணிடம் இருந்து பாலியல் சேவைகளைப் பெற்றதை ஒப்புக்கொண்டதையடுத்து காயோஹெலோவுக்கு நேற்று 10 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கணக்கியல், நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையப் பக்கத்தில் தேடிப் பார்த்ததில், தொழில் தொடங்கிய நிறுவனங்களில் முதலீடு செய்த நிறுவனம் ஒன்றின் இயக்குநராகவும் பங்குதாரராகவும் காயோஹெலோ இருந்தார் என தெரியவந்தது.
அதிகாரிகளுக்குக் கையூட்டு வழங்க $4,000 கொடுத்ததை ஒப்புக்கொண்டார்
பலூன்களைக் கையாளும் நிறுவனத்தின் இயக்குநரான கோ சியோங் கியாட், 2015ல் வெவ்வேறு சம்பவங்களில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணைய அதிகாரி ஒருவருக்கும் கையூட்டு வழங்க, தம்முடன் வேலை செய்த ஊழியர் ஒருவருக்கு $4,000 வழங்கியிருந்தார்.
காவல்துறை அதிகாரிக்கு $1,000 கையூட்டு வழங்க ஆடவர் ஒருவரைத் தூண்டிய குற்றத்தை நேற்று அவர் ஒப்புக்கொண்டார். அதே ஆடவர் மூலம் குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிக்கு $3,000 கையூட்டு வழங்க முற்பட்ட குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அக்டோபர் 21ஆம் தேதி கோவுக்குத் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கையூட்டு வழங்கியதற்காக குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $100,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

