ஓய்வுபெற்ற ஊழியரான லிம் தியாம் தெங் மரின் பரேட்டில் உள்ள மோன்ட்ஃபர்ட் கேர் குட்லைஃப் நிலையத்தை தம் இரண்டாவது இல்லமாகக் கருதுகிறார்.
வாரத்திற்கு மூன்று முறை அங்கு சைக்கிளில் சென்றுவரும் இவர், ஒவ்வொரு முறையும் அங்கு சுமார் ஒரு மணி நேரம் செலவிடுகிறார்.
'வாட்ஸ்அப்' செயலியை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இவர் இந்த நிலையத்தில்தான் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்தில் உள்ள கடிதங்களை இவர் படித்து புரிந்துகொள்ள தொண்டூழியர்கள் உதவுகின்றனர்.
தாம் 65 வயதை எட்டியதைத் தொடர்ந்து திரு லிம் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். 2011ல் இவருடைய மனைவி மரணம் அடைந்த பிறகு, இவர் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தார். வீட்டு வேலை செய்வது, பாட்டு கேட்பது போன்றவற்றில் இவர் நேரத்தைச் செலவிட்டார்.
2014ல் தம் வீட்டிற்கு அருகே இருந்த ஓர் இடத்தில் திரு லிம் கீழே விழ நேரிட்டது. இவருக்குக் காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மூன்று அறுவை சிகிச்சைகளைச் செய்துகொள்ள வேண்டியிருந்தது.
இவருடைய இரு மகள்களும் ஒரு மகனும் பேரப்பிள்ளைகளுடன் அவ்வப்போது இவரைச் சென்று பார்ப்பர்.
கொவிட்-19 பெருந்தொற்றின்போது மோன்ட்ஃபர்ட் கேர் நிலையம் வாரந்தோறும் திரு லிம்மை தொடர்புகொண்டு இவரிடம் நலன் விசாரித்தது.
காலப்போக்கில் இவருக்கும் இந்த நிலையத்துக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட, இவர் நிலையத்திற்குச் சென்றுவரத் தொடங்கினார்.
இந்த நிலையம் 60 முதல் 108 வயது வரையுடைய 2,000க்கும் மேற்பட்ட மூத்தோருக்கு சேவையாற்றி வருகிறது.
இன்று திரு லிம் இந்த நிலையத்தின் வலுவான ஆதரவாளராக உள்ளார்.
"என்னைப் போன்ற மூத்தோர் மேலும் பலருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நேரத்தைக் கழிக்க இது எளிதாக இருக்கும்.
"மேலும், எங்கள் பிரச்சினைகளைப் பற்றியே நாம் சிந்தித்துக்கொண்டு இருக்க மாட்டோம்," என்றார் இவர்.

