உலகப் பொருளியல் முன்னெப்போதும் இல்லாத சூழலை எதிர்நோக்குகிறது. பணவீக்கத்தை எதிர்கொள்ள மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துவதால், பொருளியல் மந்தநிலை ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. உக்ரேன்-ரஷ்யா போர் புவிசார் அரசியல் நிலவரத்தை மாற்றியுள்ளது. இவை எல்லாம் இருந்தும், கொந்தளிப்பான சூழலில் பலனடையும் நிலையில் இந்தியா உள்ளது.
சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற ஃபோர்ப்ஸ் குளோபல் சிஇஓ மாநாட்டில் உரையாற்றிய இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி இதனைக் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய பொருளியல் மெதுவடைவதையும் உலக நாடுகளால் சீனா ஒதுக்கப்பட்டு வருவதையும் சுட்டிய இவர், "அரசியல், சந்தை கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கையில், பிரகாசமான சில இடங்களில் ஒன்று இந்தியா," என்றார்.
இதன் பொருட்டு, அடுத்த 10 ஆண்டுகளில் அதானி குழுமம் US$100 பில்லியன் ($143 பி.) முதலீடு செய்யும். ஒருங்கிணைந்த பசுமை ஹைட்ரோஜன் சார்ந்த தொழிலிலும் US$70 பில்லியன் முதலீடு செய்ய இக்குழுமம் கடப்பாடு கொண்டுள்ளது.
இந்திய தரவு மையச் சந்தையிலும் அதானி குழுமம் வளர்ச்சி வாய்ப்புகளை நாடவிருக்கிறது.

