இஸ்தானாவில் காவலர்களை மாற்றும் சடங்கு அக்டோபர் 2ல் தொடரும்
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஈராண்டு இடைவேளைக்குப் பிறகு இஸ்தானாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை காவலர்களை மாற்றும் சடங்கு தொடரும்.
அக்டோபர் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு இஸ்தானாவின் பிரதான வாயிலில் சடங்கு நடைபெறும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
1959 முதல் இஸ்தானாவின் பிரதான வாயிலில் சடங்குபூர்வ காவல் அணியினர் காவல் பணியை ஆற்றி வந்தனர். சிங்கப்பூர் காலாட்படையின் முதலாவது பட்டாளத்தைச் சேர்ந்த போர்ப் படையினர் அந்த ஆண்டில்தான் அந்த வாயிலைக் காவல் காத்தனர்.
இஸ்தானாவைக் காவல் காக்க போர்ப் படையினர் பயன்படுத்தப்பட்டது 1968ல் முடிவுக்கு வந்தது. சிங்கப்பூர் ஆயுதப் படையின் காவலர் பிரிவு அப்போது அமைக்கப்பட்டது.
இஸ்தானாவில் காவலர்களை மாற்றும் சடங்கின் அமைப்பு, பிரிட்டனில் பக்கிங்ஹம் மாளிகையில் இடம்பெறும் காவலர்களை மாற்றும் சடங்கின் அடிப்படையில் உள்ளது. மற்றொரு காவல் படைப்பிரிவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுவதை இந்தச் சடங்கு அதிகாரபூர்வமாக குறிக்கிறது.
'கிராப் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்பு மெதுவடையலாம்'
கிராப் ஹோல்டிங்ஸ் நிறுவனம், அடுத்த ஆண்டு வருவாய் வளர்ச்சி கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறது. சந்தை சரிவுக்கு தன்னை சரிசெய்து வரும் இந்நிறுவனம், பல ஆண்டுகளாக ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய அது எடுத்துவரும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
நிபந்தனையுடன் கூடிய அடிப்படையில் 2024 இரண்டாம் பாதியில் லாபம் ஈட்டத் தொடங்குவதை கிராப் எதிர்பார்க்கிறது.
இதன் தொடர்பில் நேற்று நடைபெற்ற நிறுவன நிகழ்ச்சியில் பேசிய கிராப் தலைமை நிர்வாகி ஆன்டனி டான், "முன்னோக்கிச் செல்கையில், லாபம் ஈட்டுவதை உறுதிசெய்ய எல்லா கோணங்களிலும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்," என்றார்.
இதற்கிடையே, சிங்டெல் நிறுவனத்துடனான தன் மின்னிலக்க வங்கிச் செயல்பாடு 2026ல்தான் லாபம் ஈட்டத் தொடங்கும் என கிராப் எதிர்பார்க்கிறது.

