செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
abb7548a-4017-453b-86fd-62a720afed6d
-

ஊழியர் தங்குவிடுதியில் செயற்கை கூரை விழுந்ததில் இருவர் காயம்

உட்லண்ட்சில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் செயற்கைக் கூரை விழுந்ததில் அங்கு தங்கும் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் பதிவான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கூரையின் பாகங்கள் தரையில் சிதறிக் கிடப்பது காணொளியில் தெரிந்தது. அங்கிருந்த ஊழியர்கள் அறையிலிருந்து வெளியேறுவதும் பதிவானது. இச்சம்பவம் நார்த் கோஸ்ட் லாட்ஜ் தங்குவிடுதியில் நிகழ்ந்தது.

கனமழையாலும் பலத்த காற்றாலும் கூரை விழுந்தது என்றும் அது குறித்து தான் விசாரணை நடத்தி வருவதாக வும் மனிதவள அமைச்சு தெரிவித்தது. தண்ணீர் சற்று ஒழுகியதால் வேறு இரு அறைகளிலும் சேதம் ஏற்பட்டதாக அமைச்சு கூறியது.

நிலைமையைச் சமாளிக்க மனிதவள அமைச்சின் அதிகாரிகள், காவல்துறையினர், சிங்கப்பூர் ஆயுதப் படை யினர் ஆகியோர் நார்த் கோஸ்ட் லாட்ஜ் தங்குவிடுதிக்கு அனுப்பப்பட்டனர். காயமடைந்த இருவருக்கு லேசான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அறைகளில் வசித்த சுமார் 100 பேர் தற்காலிகமாக வேறு அறைகளுக்கு மாற்றப் பட்டனர்.

சிங்கப்பூரரின் தலைமையில் ஐநா

பரந்த புவியியல் வல்லுநர் குழு

ஐக்கிய நாட்டு நிறுவனம் முதன்முறையாக அதன் பரந்த புவியியல் வல்லுநர் குழுவின் தலைவராக சிங்கப்பூரர் ஒருவரை நியமித்துள்ளது.

அந்தப் பெருமைக்குரியவர் டாக்டர் விக்டர் கூ. குழுவின் தலைவர்களில் ஒருவரான இவர் மூவாண்டுகளுக்குப் பணியாற்றுவார். ஐநா பரந்த புவியியல் வல்லுநர் குழு, உலகளவில் நிலப் பயன்பாட்டு நிர்வாகத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பெண்கள் கழிவறையில் காணொளி எடுத்த மாணவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் உள்ள பெண்கள் கழிவறை ஒன்றில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அத்துமீறி நுழைந்தார்.

முகமது டானியல் நோர்பின் எனும் அந்த 26 வயது மாணவர் கழிவறைக் கூடத்தில் கதவுக்குக் கீழே ஒரு கைப்பேசியை காணொளி எடுக்கும் வகையில் வைத்தார்.

அத்துமீறி நுழைந்தது, சட்டவிரோதமாகக் காணொளி எடுத்தது என்று இரு குற்றச்சாட்டுகளை டானியல் எதிர் நோக்குகிறார். அவர் அடுத்த மாதம் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவம் குறித்து புகார் கிடைத்தவுடன் டானியலை ஓராண்டுக்கு அங்கு கல்வி கற்பதிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி நேற்று முன்தினம் தெரிவித்தது. குற்றம் சாட்டப்பட்ட வருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் மனநலத்தைக் கண்காணிப்பதாகவும் கல்லூரி தெரிவித்தது.

பாலியல் தொடர்பான ஒழுங்கீனச் செயல்களைத் தான் கடுமையாகக் கண்டிப்பதாகவும் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி கூறியது. அத்துமீறி நுழைந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், டானியலுக்கு மூன்று மாதம் வரையிலான சிறை, $1,500 வரையிலான அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம்.

2018 முதல் மின்சிகரெட்டுகள் விற்றதற்காக 428 பேர் சிக்கினர்; 92 பேர் மீது வழக்கு

மின்சிகரெட்டுகள் விற்றதற்காக 2018ஆம் ஆண்டிலிருந்து கடந்த மாதம் வரை மொத்தம் 428 பேர் பிடி பட்டுள்ளனர் என்றும் அவர் களில் 91 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று தெரிவித்தது.

மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தியதற்காகவும் அவற்றை வைத்திருந்ததற்காகவும் பிடிபட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2021ல் மின்சிகரெட்டுகளைப் பயன் படுத்தியதற்காகவும் அவற்றை வைத்திருந்ததற்காகவும் 4,697 பேர் பிடிபட்டனர். அது 2020ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 1,266ஐவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். இதற்கிடையே, கடந்த மாதம் இந்தக் குற்றச் செயல்களுக்காக 3,912 சிக்கினர்.

"இளையர்களிடையே, மின்சிகரெட் பயன்பாட்டைத் தடுக்க, சுகாதார அமைச்சு, சுகாதார மேம்பாட்டு வாரியம், கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் நாங்கள் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறோம். மின்சிகரெட் பயன்பாட்டைத் தடுக்க, சட்ட நடவடிக்கை, அமலாக்கம், பொதுத் தகவல், ஆலோசனை ஆகிய பன்முனை அணுகுமுறையை சிங்கப்பூர் கையாள்கிறது," என்றும் ஆணையம் தெரிவித்தது.