யாருமில்லாத தனது காரில் இரு நாய்களைக் கவனிப்பாரின்றி விட்டுச் சென்றதால் அவற்றின் மரணத்துக்குக் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடை விதிக்கப்பட்டிருந்த நாய் பயிற்றுவிப்பாளர் தனது தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் தோல்வியடைந்து விட்டார்.
கடந்த ஜூனில் 30 வயது சப்ரினா சிம் சின் ஹுவே எனும் அந்த மாதுக்கு $8,000 அபராதமும் விலங்கு தொடர்பான வர்த்தகம் புரிய ஆறு மாதத் தடையும் விதிக்கப்பட்டன.
விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டத்தின்கீழ் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சிம் ஒப்புக்கொண்டார். தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக சின் மேல்முறையீடு செய்திருந்தார். அதை நேற்று நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வின்செண்ட் ஹூங், கவனக்குறைவாக அவர் நடந்துகொண்டது இரு அப்பாவி நாய்களின் உயிரைப் பறித்துவிட்டது என்றார்.
"இந்தத் தடை, விலங்குகளைப் பாதுகாக்கும் பொறுப்பு பற்றியும் அதை மீறுவோருக்கும் கவனக்குறைவாக நடந்துகொள்வோருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வலியுறுத்துகிறது," என்று நீதிபதி ஹூங் மேலும் கூறினார்.
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி, பயிற்சிக்காக தன்னிடம் விடப்பட்ட இரண்டு பிரஞ்சு புல்டாக் வகை நாய்களை அவற்றுக்கான பயிற்சி முடிந்தவுடன் காரின் பின்பகுதியில் உள்ள பொருள் வைக்கும் இடத்தில் வைத்து வீட்டுக்கு ஓட்டிச் சென்றார்.
வெளிப்புறத்தில் காரை நிறுத்திய அவர், சமூக ஊடகத்தில் மற்றொரு நாய் தொடர்பாக வந்த செய்தியை ஆர்வத்துடன் படித்ததால், காரின் பின்புறத்தில் விடப்பட்ட நாய்கள் மற்றி மறந்துபோனார்.
அதன் காரணமாக, ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு அந்த நாய்கள் வெப்பம் தொடர்பான உளைச்சலால் காருக்குள்ளே மாண்டுவிட்டன.

