ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஷோல்வாட்டர் பே பயிற்சி இடத்தின் விரிவாக்கப் பணி, திட்டமிட்டபடி 2024க்குள் நிறைவு செய்யப்படும்.
இந்த இடத்துக்குப் பக்கத்தில் உள்ள கிரீன்வேல் பயிற்சி இடம் 2028ல் தயாராகும். இவ்விரு இடங்களையும் சேர்த்து, சிங்கப்பூரின் பரப்பளவைவிட 10 மடங்கு அதிக பயிற்சி இடவசதியை சிங்கப்பூர் ஆயுதப் படைக்கு இவை வழங்கும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று தெரிவித்தார்.
ஷோல்வாட்டர் பே பயிற்சி இடம், தற்போது சிங்கப்பூரைவிட ஏறத்தாழ நான்கு மடங்கு பெரியதாகும்.
2020ல் சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே செய்யப்பட்ட உடன்பாட்டில் இந்தப் பயிற்சி இடத்துக்கான விரிவாக்கம் இடம்பெற்றது.
நேரடி துப்பாக்கிச்சூட்டிற்கான பாவனை நகர சூழல் போன்ற அதிநவீன வசதிகள் இந்த விரிவாக்கப் பணியில் இடம்பெறும்.
பணிகள் முடிக்கப்பட்டவுடன், இவ்விரு பயிற்சி இடங்களும் சேர்ந்த பகுதியில் 18 வாரங்கள் வரையிலான காலகட்டத்தில் 14,000 ராணுவ வீரர்கள் வரை பயிற்சி செய்யலாம். தற்போது ஏறக்குறைய 6,600 பேர் இங்கு ஆறு வாரங்களுக்குப் பயிற்சி செய்ய முடிகிறது.
சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் 'ஆர்எஸ்எஸ் எண்டியோரன்ஸ்' கப்பல் தளத்தில் செய்தியாளர்களிடம் டாக்டர் இங் பேசினார்.
ஆஸ்திரேலிய தற்காப்புப் படைக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படைக்கும் இடையிலான 'டிரைடண்ட்' பயிற்சியின் ஒரு பகுதியாக ஷோல்வாட்டர் பேயில் உள்ளது.
ராணுவ வீரர்கள் 'டிரைடண்ட்', 'வாலபி' பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்க்க டாக்டர் இங் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020ல் இந்தப் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இப்பயிற்சி சிறிய அளவில் நடத்தப்பட்டது.
இவ்விரு பயிற்சிகளும் இடம்பெறுவதற்கு ஆஸ்திரேலிய ராணுவம் அளித்துள்ள அதன் ஆதரவுக்காக தாம் நன்றியுடன் இருப்பதாக டாக்டர் இங் சொன்னார். இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையேயான உறவுகளை இந்தப் பயிற்சிகள் குறிப்பிடத்தக்க அளவு வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
'டிரைடண்ட்' பயிற்சியில் பங்கேற்கும் முதல் ஆஸ்திரேலிய கப்பலான 'எச்எம்ஏஎஸ் அடிலெய்ட்' கப்பலுக்கும் டாக்டர் இங் சென்றார். அங்கு சிங்கப்பூர் ஆயுதப் படையையும் ஆஸ்திரேலிய தற்காப்புப் படையையும் சேர்ந்த ராணுவ வீரர்களிடம் அவர் பேசினார்.