எஃப்-16 ரக போர் விமானங்களின் உதவியுடன் விமானம் தரையிறங்கியது
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து நேற்று அதிகாலை சிங்கப்பூர் வந்திறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 37 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வெளிநாட்டவர் என அறியப்படுகிறது.
எஸ்கியூ33 விமானம் திங்கள்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10.26 மணிக்கு சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து புறப்பட்டது.
அந்த விமானம், சிங்கப்பூர் ஆகாயப் படையின் எஃப்-16 ரக போர் விமானங்களின் உதவியுடன் சாங்கி விமான நிலையத்தில் நேற்றுக் காலை 5.50 மணிக்குத் தரையிறங்கியது. விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து நேற்று அதிகாலை 2.40 மணிக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆடவர், விமானத்திற்குள் கொண்டுவந்த பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறினார். பின்னர் அவர் விமானச் சிப்பந்திகளைத் தாக்கினார் என்றும் சிப்பந்திகள் அந்த ஆடவரைக் கட்டுப்படுத்தினர் என்றும் காவல்துறை குறிப்பிட்டது.
விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் இது குறித்த புகைப்படங்களைத் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். ஆடவர் ஒருவர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கத்தியதால் நான்கு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது என்றும் பின்னர் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார் என்றும் அந்தப் பயணி கூறினார்.
சாங்கி விமான நிலையத்தின் தனிமையான இடத்துக்குச் சென்ற விமானம், பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பிறகு காலை 9.20 மணிக்கு முனையம் 3க்கு வந்தது.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் ரசாயன, உயிரியல், கதிரியக்க, வெடிகுண்டு தற்காப்புக் குழுவும் விமான நிலைய காவல்துறை பிரிவும் விசாரணைக்கு அனுப்பப்பட்டன என்றும் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டது என்றும் தற்காப்பு அமைச்சு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
போர் விமானங்களின் உதவியுடன் விமானம் சாங்கி விமான நிலையத்துக்கு வந்தபோது அதில் இருந்த பயணிகள் அமைதியாக இருந்தனர்.
விமானப் பணியாளர்கள் சூழ்நிலையைத் திறம்பட கையாண்டதாகவும் அவர்கள் அளவுக்கு அதிகமாகப் பதற்றம் அடையவில்லை என்றும் விமானத்தில் இருந்த அமெரிக்கப் பயணியான அலிஸ் என்பவர் கூறினார்.

