2024ல் 50 ஆண்டுகால அரசதந்திர உறவுகளைக் குறிக்கும் சிங்கப்பூர், லாவோஸ்
சிங்கப்பூருக்கும் லாவோசுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளில் 2024ல் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக எரிசக்தி, மின்னிலக்கம், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற பாதுகாப்பு போன்ற வளர்ந்துவரும் அம்சங்களில் இவ்விரு நாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகின்றன.
இஸ்தானாவில் நேற்று இரு நாடுகளுக்கு இடையே நான்கு புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டன.
பிரதமர் லீ சியன் லூங், லாவோஸ் பிரதமர் ஃபான்காம் விஃபாவா முன்னிலையில் இவை கையெழுத்திடப்பட்டன.
பிரதமர் லீயின் அழைப்பை ஏற்று பிரதமர் விஃபாவா சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் லாவோசின் எரிசக்தி, சுரங்கத்துறை அமைச்சர் டாவோங் ஃபோன்கியோவும் எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு குறிப்பில் கையெழுத்திட்டனர்.
சுற்றுப்புற நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு, நீர்வளம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவும் லாவோசின் இயற்கை வளங்கள், சுற்றுப்புற அமைச்சர் பௌன்காம் வொராசிட்டும் கையெழுத்திட்டனர்.
மின்னிலக்க ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பை தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியும் லாவோசின் தொழில்நுட்ப, தொடர்பு துணை அமைச்சர் சான்திசோக் சிம்மாலாவோங்கும் பரிமாறிக்கொண்டனர்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் லாவோஸ் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான சலியும்சே கோம்மாசித்தும் புரிந்துணர்வு குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டனர். இதன்மூலம் இருநாட்டு வெளியுறவு அமைச்சுகளும் இருதரப்பு கலந்தாலோசனைகளை அமைத்தன.
நேற்று முன்னதாக லாவோஸ் பிரதமர் ஃபான்காமுக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் லீயையும் அதிபர் ஹலிமா யாக்கோப்பையும் அவர் சந்தித்தார்.
கொவிட்-19 பெருந்தொற்றிலும் இரு நாடுகள் புதிய அம்சங்களில் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளதாக திருவாட்டி ஹலிமா தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
கலாசாரங்களுக்கு இடையிலான புரிதலை ஊக்குவிக்க மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தி, உறவுப் பாலங்களைக் கட்டமைத்து, நாட்டு மக்களுக்காக புதிய வாய்ப்புகளை இவை ஏற்படுத்தித் தரும்.
சிங்கப்பூர்-லாவோஸ் மேம்பட்ட ஒத்துழைப்பு தொகுப்புத் திட்டத்தை சிங்கப்பூர் செயல்படுத்தும் என்று பிரதமர் லீ கூறினார். நகரத் திட்டமிடுதல், தளவாடங்கள் உள்ளிட்ட பல அம்சங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படலாம் என்பதை பிரதமர் லீ சுட்டினார்.
"சிறிய நாடுகளாக வட்டார அமைதியையும் நிலைத்தன்மையையும் கட்டிக்காப்பதிலும் திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய, விதிமுறை சார்ந்த பலதரப்பு முறையை நிலைநாட்டுவதிலும் நாங்கள் விருப்பம் காட்டுகிறோம்," என்றார் பிரதமர் லீ.

