சிங்கப்பூரில் ஆண்டுதோறும் டெங்கிப் பரவல் அதிகரிக்கும் பருவத்திற்கு முன்பாகவே இந்த ஆண்டு டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது டெங்கி பாதிப்பு குறைவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியுள்ளது.
இந்த ஆண்டின் முற்பாதியில், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதால் டெங்கி பரவும் அபாயமிக்க ஏறக்குறைய 11,300 இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
இந்நிலையில், இம்மாதம் பதிவான வாராந்தர டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 600க்குக் கீழ் குறைந்துள்ளது. சென்ற மே மாதம் இது 1,568ஆக இருந்தது.
ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இம்மாதம் டெங்கி பரவும் அபாயம் மிக்க இடங்களின் எண்ணிக்கை 62 விழுக்காடு குறைந்திருப்பதாக வாரியம் நேற்று தெரிவித்தது.
சென்ற செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இத்தகைய 144 இடங்கள் மட்டுமே காணப்படுவதாக வாரியத்தின் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு நாடு முழுவதும், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் 18,500 இடங்கள் கண்டறியப்பட்டன.
இந்த ஆண்டு பிப்ரவரியில் சிங்கப்பூரில் டெங்கிப் பரவல் எதிர்பாரா விதமாக அதிகரித்தது. வழக்கமாக ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில்தான் இங்கு டெங்கி அதிகமாகப் பரவும்.
கடுமையான முயற்சியால் நிலைமையைச் சமாளிக்க முடிந்தாலும், தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம் என்று வாரியம் வலியுறுத்தியது.
இந்த ஆண்டின் முற்பாதியில் கண்டறியப்பட்ட டெங்கித் தொற்று இடங்களில் 63 விழுக்காடு வீடுகள், 25 விழுக்காடு பொது இடங்கள், நான்கு விழுக்காடு கட்டுமானத்தலங்கள், எட்டு விழுக்காடு பள்ளிகள், தங்குவிடுதிகள், தொழிற்சாலைகள் போன்றவை என்பதை அது சுட்டியது.

