சிங்கப்பூரில் பணவீக்கம் காரணமாக வாழ்க்கைச் செலவு கூடும் நிலையில், தேசிய சம்பள மன்றம் முன் எப்போதையும்விட இப்போது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
அந்த மன்றம் சிங்கப்பூரின் தொடர் வெற்றியையும் செல்வச்செழிப்பையும் உறுதிப்படுத்த தொடர்ந்து முக்கியப் பணியாற்றி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிதி அமைச்சருமான திரு வோங், மன்றத்தின் 50வது ஆண்டு விருந்தில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய துணைப் பிரதமர், மன்றத்தைப் பெரிதும் பாராட்டினார்.
மன்றம் தோற்றுவிக்கப்பட்டதன் காரணமாக தொழிலாளர் உறவுகளில் மிகவும் நிலையான, முன்னேற்றகரமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வழி ஏற்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தாக்குப்பிடிக்கக்கூடிய சம்பள அதிகரிப்பைச் சாதிக்கவும் வேலைகளைப் பாதுகாக்கவும் பொருளியல் நெருக்கடிகளின்போது பொருளி யல் மீட்சியை மேம்படுத்தவும் உதவுகின்ற சம்பளம், சம்பளம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடுவதற்காக ஆண்டுதோறும் தேசிய சம்பள மன்றம் கூடுகிறது.
முதலாளிகள், தொழிற்சங்கங்கள், அரசாங்கம் ஆகிய முத்தரப்பு களையும் கொண்ட இந்த மன்றம், 1972 முதல் செயல்பட்டு வருகிறது.
மன்றத்தின் 50வது ஆண்டுவிழா விருந்தில் மன்றத்தின் கடந்தகால, நிகழ்கால உறுப்பினர்களும் முக்கியமான முத்தரப்புப் பங்காளிகளும் கலந்துகொண்டனர்.
சம்பளம், சம்பளம் தொடர்பான பிரச்சினைகளில் தேசிய அளவில் கருத்திணக்கத்தைப் பேணி உருவாக்குவதற்கான முக்கியமான முத்தரப்புத் தளமாக மன்றம் திகழ்ந்து வருகிறது.

