டாக்சி, தனியார் வாடகை வாகன சேவை ஆகியவை தொடர்பில் மாணவர்கள், ஓய்வுபெற்றவர்கள், வேலையில்லாதோர் ஆகியோரிடம் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு மனநிறைவு குறைந்து காணப்படுகிறது.
இருந்தாலும்கூட, பொதுப் பேருந்து, எம்ஆர்டியைப் பொறுத்தவரை சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மனநிறைவு தொடர்ந்து இருந்து வருகிறது.
'சிங்கப்பூர் வாடிக்கையாளர் மனநிறைவுப் பட்டியல் 2022' என்ற ஓர் ஆய்வறிக்கையை, 'உன்னதச் சேவைப் பயிலகம்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்தப் பயிலகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது.
ஆய்வறிக்கை மூலம் இந்த நிலவரம் தெரியவந்துள்ளது. எம்ஆர்டி ரயில்கள், பொதுப் பேருந்துகள், டாக்சிகள், தனியார் வாடகை கார்கள் ஆகியவை உள்ளிட்ட நிலப் போக்குவரத்து துறையில் ஆய்வு ஒருமித்த கவனம் செலுத்தியது.
இந்த வருடாந்திர ஆய்வு 2007ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அதில், ஏப்ரல் மாதத்திற்கும் ஜூலை மாதத்திற்கும் இடையில் 2,350 உள்ளூர்வாசிகளிடம் இருந்து இணையம் மூலம் கருத்துகள் திரட்டப்பட்டன.
டாக்சிகள், தனியார் வாடகை கார்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, வேலை பார்க்காத பயணிகளிடையே சென்ற ஆண்டு மனநிறைவு அளவு 76.5 புள்ளியாக இருந்தது. இது இந்த ஆண்டில் 72.1 புள்ளியாகக் குறைந்துவிட்டது. இந்தக் குறைவு 5.8%க்குச் சமம். இவர்கள் எந்த வகை வேலையையும் பார்க்காதவர்கள்.
ஆனால், வேலை பார்க்கும் பயணிகளை உள்ளடக்கி பார்க்கும் போது டாக்சி, தனியார் வாடகை கார்களுக்கான ஒட்டுமொத்த மனநிறைவு சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 0.4% அதிகமாகி உள்ளது.
டாக்சி, தனியார் வாடகைக் கார்களைப் பயன்படுத்துவதன் தொடர்பிலான மதிப்பு என்று வரும்போது வேலை பார்ப்போரைவிட வேலை பார்க்காத வாடிக்கையாளர்களிடம் மனநிறைவு குறைந்து காணப்படுகிறது.
எளிதாக காரைப் பிடித்து பயணம் செய்வது அல்லது பயணத்திற்காக காத்திருப்பது ஆகியவற்றைப் பொறுத்தவரை, வேலை பார்ப்போரைவிட வேலை பார்க்காதவர்களிடம் கணிசமான அளவுக்கு மனநிறைவு குறைந்திருந்தது.
இதனிடையே, இந்த நிலவரம் பற்றி கருத்து கூறிய உன்னதச் சேவை பயிலகத்தின் நிர்வாக இயக்குநரான திருவாட்டி நீட்டா லட்சுமண்தாஸ், டாக்சிகளும் வாடகை கார்களும் சாலைகளில் முன்னிலும் குறைவாக ஓடியதும் அவற்றை நிர்வகித்து நடத்துவோர் அதிக கட்டணம் வசூலித்ததும் இதற்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
பொதுப் பேருந்துகள், எம்ஆர்டி ரயில்களைப் பொறுத்தவரை மனநிறைவு சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தொடர்ந்து இருந்து வருகிறது.

