ஒன்பதாண்டுகளுக்கும் அதிக காலம் சிறைத்தண்டனை, பிரம்படி
போதைப்புழக்கம், போக்குவரத்து, இதர குற்றச் செயல்களுக்காக ஒருவருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கும் அதிக காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வாஸ்வானி ரிச்சர்ட் பிரகாஷ், 36, என்ற அந்த ஆடவர், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி ஓட்டிச்சென்ற கார், சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்மணி மீது மோதியதில் அவர் உடலில் பல இடங்களில் காயம் அடைந்தார். இடது கணுக்காலில் எலும்பு முறிந்தது.
தகுதி இழப்பு செய்யப்பட்டு இருந்தபோது வாகனம் ஓட்டியது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, கடுமையான காயத்தை ஏற்படுத்தியது, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை உள்ளிட்ட பல குற்றங்களை செப்டம்பர் 14ஆம் தேதி வாஸ்வானி ஒப்புக்கொண்டார்.
வாஸ்வானி 2019ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையானார். அவர் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதிவரை எந்த ஒரு குற்றச்செயலிலும் ஈடுபடக்கூடாது என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அவர் காவல்துறை அதிகாரிகள் விரட்டிச் சென்று பிடிக்கும் அளவுக்கு காரை வேகமாக ஓட்டிச் சென்றார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
வாஸ்வானிக்கு மொத்தம் ஒன்பது ஆண்டுகள், ஆறு மாதங்கள், 10 வாரங்கள், 182 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது; $3,000 அபராதம் விதிக்கப்பட்டது; 12 பிரம்படிகள் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. அவர் மேலும் 228 நாள்கள் சிறையில் இருக்க வேண்டும்.
$790,000 போதைப்பொருள் சிக்கியது; ஐவர் கைது
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கட்கிழமை நடத்திய இரண்டு சோதனைகளில் ஐவர் கைதாயினர். அந்த ஐவரும் போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சோதனைகளின்போது ஏறக்குறைய 13 கிலோ போதைப்பொருள் பிடிபட்டது. அவற்றின் மதிப்பு $790,000 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கஞ்சா, ஐஸ், ஹெராயின், கெட்டமின், எக்ஸ்டசி மாத்திரைகள், எரிமின்-5 மாத்திரைகள் பலவும் அவற்றில் அடங்கும்.
கிட்டத்தட்ட 4,517 கிராம் கஞ்சா தீயணைப்பு சாதனத்துக்குள் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது. அந்தச் சாதனம் ஒரு வாகனத்தில் இருந்தது. அந்த வாகனம் இம்மாதம் 26ஆம் தேதி ரிவர்வேல் ஸ்திரீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது பிடிபட்டது.
கைதான ஐவரும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
கார் பட்டறை குறித்து அவதூறு செய்தவருக்கு உத்தரவு
கார் பட்டறை குறித்து அவதூறு செய்ததற்காக $51,000க்கும் மேற்பட்ட தொகையைச் செலுத்தும்படி ஆடவர் ஒருவருக்கு உத்தரவிடப்பட்டது.
கார் மின்கலனுக்கான உத்தரவாத காலம் இன்னமும் இருந்தாலும் அதைச் சரிபார்த்துத்தர அந்தப் பட்டறை தன்னிடம் கட்டணம் கேட்கிறது என்று மூன்று ஃபேஸ்புக் குழுக்களில் அந்த ஆடவர் தெரிவித்தார்.
ஜெர்ரி டாங் முன் வா என்ற அந்த ஆடவர் 'ஆன் சைட் கார் அக்சசரிஸ்.எஸ்ஜி' என்ற பட்டறையை அவதூறு செய்துவிட்டதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இழப்பீடாக $20,000; சட்ட செலவாக $24,000; கைச்செலவாக $7,000க்கும் மேற்பட்ட தொகையை அவர் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டாங்கிற்கு எதிராக அந்தப் பட்டறை 2021ஆம் ஆண்டில் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தது. ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆகையால் அது உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

