சண்முகம்: போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் போதைப்பொருளால் ஏற்படும் தீங்குக்கு உதாரணம்

1 mins read
86e090b6-db30-45c7-8a27-823774177e61
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விமானத்தில் பொய்யாக வெடிகுண்டு மிரட்டலை விடுத்த சம்பவம், போதைப்பொருள் ஏற்படுத்தும் தீங்குக்கான உதாரணங்களில் ஒன்று என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

அந்த 37 ஆடவர் சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூர் வந்த எஸ்ஐஏ விமானத்தில் மிரட்டல் விடுத்தார். விமானப் பணியாளரைத் தாக்கினார். அவர் அப்போது கட்டுப்படுத்தப்பட்ட போதை மருந்து உட்கொண்டிருந்தார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அந்தச் சம்பவம் பற்றி குறிப்பிட்டுப் பேசிய திரு சண்முகம், போதைப் பொருள் அதைப் புழங்குவோருக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் தீங்கு ஏற்படுத்துவதாகச் சொன்னார்.

எல்எஸ்டி போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு, தாயாரையும் பாட்டியையும் கொன்ற 25 வயது ஆடவரைப் பற்றியும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அவரைக் கால வரம்பின்றி தடுத்து வைக்கும்படி உயர் நீதிமன்றம் சில நாள்களுக்கு முன்னர் உத்தரவிட்டது.

அண்மைய ஆண்டுகளில் மற்ற நாடுகள், சில வகை போதைமருந்துகளை உட்கொள்வது குற்றமில்லை என்று வகைப்படுத்தியுள்ளன.

தாய்லாந்தை உதாரணம் காட்டிய திரு சண்முகம், அங்கு இளையர்கள் கஞ்சா குடித்துவிட்டு தங்களைக் காயப்படுத்திக் கொள்வது, மயக்கநிலையில் அவர்களுக்கு பிரமை ஏற்படுவது போன்ற செய்திகள் வருவதைச் சுட்டினார்.

சிங்கப்பூர் போதைப்பொருள் ஒழிப்புச் சங்கம் நடத்திய மாநாட்டில் (வியாழன் செப் 29) அன்று திரு சண்முகம் பேசினார்.