தற்போது நிலவிவரும் பொருளியல் நெருக்கடியில் இருந்து உலகப் பொருளியல் மீண்டெழ, நாடுகள்புத்தாக்கத்தைக் கடைப்பிடிப்பதும் உலக நாடுகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல்படுவதும் உதவும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருக்கிறார்.
'மில்கன் இன்ஸ்டிடியூட் ஏஷியா சமிட் 2022' மாநாட்டில் நேற்று பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
உலகம் தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிக்கு உடனடித் தீர்வுகள் கிடையாது என்று சொன்ன அவர், நிதி நிலவரம் மோசமடைந்த பின்னரே அது மேம்படத் தொடங்கும் என்றார்.
"இந்த நீண்ட புயலில் இருந்து வெளிவர புத்தாக்கத்துடன் சேர்ந்து செயல்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
எனினும், ஆசியாவில் சில நாடுகள் மற்ற நாடுகளைவிட நெருக்கடியைத் திறம்பட எதிர்கொள்ளும் என நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.
"ஆசியாவில் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவும் தென்கிழக்காசியாவும் மேலேறி வருகின்றன. உருவெடுத்துவரும் ஆசியாவின் புதியதொரு பகுதி இது. உலகிற்கு ஆக்ககரமான சக்தியாக இது உள்ளது," என்று திரு தர்மன் விவரித்தார்.
புத்தாக்கத்தைக் கட்டமைக்க பொது, தனியார் துறைகள் இரண்டும் தேவை என்ற அவர், உலகை மேம்படுத்தவும் கூடுதல் பாதுகாப்பாகவும் வைத்திருக்க அவை தீர்வுகளை வழங்க வேண்டும் என்று சொன்னார்.
பொருளியல் உருமாற்றத்தை மேம்படுத்தவும் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் அழிவை எதிர்த்து உலகம் போராட புதிய தொழில்நுட்பங்களின் அளவு பெரிதாக வேண்டும் என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.
ஆனால், இது நடக்க உலக நாடுகள் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"உலக நாடுகள் ஒத்துழைத்து, ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவது இன்னமும் சாத்தியமே. பலதரப்பு முறை நிறைவற்றதாக இருந்தாலும்கூட அதை வலுப்படுத்துவது சாத்தியம்," என்று திரு தர்மன் சொன்னார்.

