புளோக் 340A செம்பவாங் குளோசில் உள்ள ஏழாவது மாடி வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து நிகழ்ந்தது.
அந்த நாலறை வீட்டிலிருந்து குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அண்டைவீட்டார் இருவர் உதவினர்.
அன்றைய தினம் மாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த புளோக்கில் இருந்து சுமார் 100 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்து நிகழ்ந்த வீட்டில் இருந்து உறுப்பினர்களை வெளியேற்ற உதவியர்களில் திரு ஸு மிங் லின்னும் ஒருவர். அந்த புளோக்கில் 13வது மாடி வீட்டில் வசிக்கும் அவர், ஒன்பதாவது மாடியில் உள்ள தம் பெற்றோர் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது ஏதோ கருகிய வாடை வீசுவதாக அவருடைய மனைவி கூறியதைத் தொடர்ந்து, ஏழாவது மாடி வீட்டிற்கு திரு ஸு விரைந்தார்.
அந்த வீட்டிற்கு வெளியே இரு சிறுவர்கள் இருந்ததைக் கண்ட அவர், அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதா என அவர்களிடம் கேட்டார். ஆனால், அச்சிறுவர்களிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.
அந்த வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்ட திரு ஸு, தாம் வீட்டிலிருந்து தீயணைப்புக் கருவியை எடுக்க மேலே விரைந்தார்.
ஏழாவது மாடி வீட்டிற்கு அவசரமாக கீழே இறங்கிக்கொண்டு இருந்தபோது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையை அவர் அழைத்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு அருகே வசிக்கும் குடியிருப்பாளர்களை வெளியேற்றினர்.
இந்நிலையில், எட்டாவது மாடி வீட்டில் வசிக்கும் டேமியன் லிம், 22, தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து மூன்று சிறுவர்களையும் அவர்களுடைய தாயாரையும் வெளியேற்ற உதவினார். பின்னர் தமது வீட்டிற்குத் திரும்பிய அவர், தம்முடைய பாட்டியை வெளியேற்ற உதவினார்.
நேற்றுக் காலை, தீ விபத்து நிகழ்ந்த வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிட ஒரு தம்பதி அதற்குள் நுழைந்தனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் விசாரித்தபோது, மின்சார விசையிலிருந்து தீ பரவத் தொடங்கி இருக்கலாம் என தாம் நம்புவதாக அந்த மாது கூறினார்.
பின்னர் அவரை அந்த ஆடவர் அங்கிருந்து நகர்த்தியதைத் தொடர்ந்து, கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
புகையைச் சுவாசித்ததற்காக சிறுவர்கள் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காக வீட்டு உபயோகப் பொருள்கள் நன்கொடை அளிக்கப்பட்டு உள்ளதாக செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் வீ கியாக் நேற்று கூறினார். சோஃபா, துணிச் சலவை இயந்திரம், துணிமணிகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் நேற்று தெரிவித்தன.

