கிராப் நிறுவன தூதரானார் பூப்பந்து விளையாட்டு வீரர் லோ கியன் இயூ
பூப்பந்து விளையாட்டு வீரர் லோ கியன் இயூ, வாடகை கார் சேவை வழங்கும் கிராப் நிறுவனத்தின் தூதராக நேற்று அறிவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூரின் முதல் பூப்பந்து உலக வெற்றியாளரான லோ, 25, "கிராப் நிறுவனத்தின் முதல் தூதராக அறிவிக்கப்பட்டதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனது பண்புநலன்களைப் பிரதிபலிக்கும் சின்னத்தோடு சேர்ந்து பணியாற்றுவதில் நான் பெருமை கொள்கிறேன். கிராப் செயலி என் அன்றாட வாழ்வில் ஒரு பெரிய அங்கமாகிவிட்டது," என்று கூறினார்.
'கிராப்ஃபுட்' விநியோக ஓட்டுநராக லோ வலம்வரும் காணொளி ஒன்றுடன் இந்தப் பங்காளித்துவ முயற்சி தொடங்கப்பட்டது.
பல சிங்கப்பூரர்களுக்கும் லோ உத்வேகம் அளிப்பதாக கிராப் சிங்கப்பூர் நிர்வாக இயக்குநர் யீ வீ தாங் கூறினார்.
"இவர் உண்மையானவர் என்பதாலும் கனவுகளை நனவாக்க கடினமாக உழைப்பவர் என்பதாலும் மக்கள் இவரை மேலானவராகக் கருதுகின்றனர். இவரது வளர்ச்சி எங்களை வசீகரித்துள்ளது," என்றார் திரு யீ.
விசாக தினம் ஜூன் 2ஆம் தேதிக்கு மாற்றம்; 2023ல் 7 நீண்ட வாரயிறுதிகள்
அடுத்த ஆண்டு விசாக தினம் ஜூன் 3ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 2ஆம் தேதி இடம்பெறும் என்று மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளைத் தொடர்ந்து, சீன பஞ்சாங்கங்களுடன் சிங்கப்பூர் பௌத்த சம்மேளனம் சரிபார்த்த பிறகு விசாக தினத்துக்கான தேதி மாற்றப்பட்டது. சீன-மேற்கத்திய பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு விசாக தின தேதி குறித்து அமைச்சுக்கு சம்மேளனம் முன்னதாக அறிவுறுத்தியிருந்தது.
இதுகுறித்து சம்மேளனம் அதன் இணையப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்று மீண்டும் நிகழாமலிருக்க, இனிமேல் நாங்கள் கூடுதல் சரிபார்ப்பு நடவடிக்கைகளை நடத்துவோம்," என்று குறிப்பிட்டது.
ஜூன் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால், இதனுடன் சேர்த்து அடுத்த ஆண்டு ஏழு நீண்ட வாரயிறுதிகள் இருக்கும். மாறாக, 2023ல் ஆறு நீண்ட வாரயிறுதிகள் இருக்கும் என கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
விடுமுறையைக் கழிக்க விரும்புவோரிடையே இத்தகைய நீண்ட வாரயிறுதிகள் பிரபலமாக உள்ளன.
'தடைகள் விதிக்கப்பட்டிருப்பது குறித்து வருத்தம் இருந்தாலும் அதை ஏற்கிறேன்'
வெளிநாட்டில் கஞ்சா உட்கொண்டதை தாம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு தம்மீது தடைகள் விதித்துள்ளதற்கு நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் வருத்தம் தெரிவித்துள்ளார். எனினும், தமது செயலின் விளைவுகளை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
ஸ்கூலிங்கிற்கும் சக நீச்சல் வீராங்கனையான அமெண்டா லிம்முக்கும் நீச்சல் வீரர் டியோங் ஸென் வெய்க்கும் ஆதரவளிப்பதை ஸ்போர்ட் சிங்கப்பூர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதைத் தொடர்ந்து ஸ்கூலிங்கின் இந்த அறிக்கை நேற்று வெளியானது.
அந்த மூன்று வீரர்களுக்கும் அக்டோபர் 1லிருந்து ஒரு மாதத்திற்கு, பயிற்சி உதவி மானியங்களோ விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவ வசதிகள் மற்றும் சேவைகளோ வழங்கப்பட மாட்டா.

