அக்டோபர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து அதாவது நாளை முதல், பொதுப் பூங்காக்கள், தோட்டங்கள், சில நீர்நிலைகள், பத்து கடற்கரைகள் ஆகிய இடங்களில் புகைப்
பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து பெரும்பாலான பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்கவும் பிறர் புகைப்பிடிப்பதால் மற்றவர்களுக்கு ஏற்படும் உடல்நலத் தீங்கைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தடை குறித்து முதன்முதலில் கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. விதிக்கப்பட்டுள்ள தடையுடன் பழகிக்கொள்ள மக்களுக்குக் கால அவகாசம் கொடுக்கும் வகையில் தடை அறிவிக்கப்பட்ட முதல் மூன்று மாதங்களில் விதிமுறைகளை மீறியவர்
களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதிக்கும் இம்மாதம் 25ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 1,200 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய பூங்காக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம், செந்தோசா மேம்பாட்டுக் கழகம் ஆகியவை நேற்று தெரிவித்தன.
இந்நிலையில், தடை விதிக்கப்பட்ட இடங்களில் புகைப்பிடிப்ப
வருக்கு எச்சரிக்கை விடுக்கும் நடைமுறை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு, தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் புகைப்பிடித்தால் $200 அபராதம் அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் $1,000 வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.
புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள பூங்காக்களுடன் பழகிக்கொள்ள புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, பீஷான்-அங் மோ கியோ பூங்கா உட்பட 12 வட்டாரப் பூங்காக்களிலும் பலாவான் கடற்கரை, சிலோசோ கடற்கரை, தஞ்சோங் கடற்கரை ஆகிய இடங்களில் புகைப்பிடிப்பதற்கென்றே தனி இடங்கள் ஒதுப்பட்டுள்ளன.
புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் அதை நினைவூட்டும் வகையில் பதாகைகளும் சின்னங்களும் சுவரொட்டிகளும் பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 49,000 இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் வெளிப்புற இடங்களும் உட்புற இடங்களும் அடங்கும்.
இவ்வாண்டில் முதல் ஆறு மாதங்களில் தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்பிடித்ததற்காக 7,400 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
தற்போது புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள இடங்கள் விரிவடைந்துள்ளது. இதற்கு முன்பு தனியார், பொது வீடமைப்புப் பேட்டைகளில் உள்ள அக்கம்பக்க பூங்காக்கள், நீர்தேக்கங்கள், இயற்கை வனங்கள் போன்ற இடங்களில் மட்டுமே இத்தடை நடப்பில் இருந்தது.
கூரையுள்ள நடைபாதைகள், பேருந்து நிறுத்தத்திலிருந்து ஐந்து மீட்டர் தூரம் உள்ள இடங்கள், அடுக்குமாடிக் கட்டடங்களின் தரைத்தள வெற்றிடங்கள் ஆகியவற்றில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள பொதுப் பூங்காக்கள், பொதுப் பயனீட்டுக் கழகத்துக்குச் சொந்தமான நீர்நிலைகள் ஆகிய இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு எதிராக நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஆறுகளுக்கு அருகில் உள்ள கால்வாய்கள், முக்கிய இடங்கள் ஆகியவை அடங்கும்.
உதாரணத்துக்கு, லோரோங் ஹாலுஸ் பாலத்தில் புகைப்பிடிப்பது அனுமதிக்கப்படாது.
செங்காங் மிதக்கும் ஈரநிலம் போன்ற இடங்களிலும் பெரிய சாக்கடைகளுக்கு அருகில் உள்ள இடங்களிலும் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையின் காரணமாக சாங்கி கடற்கரை, ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரை, வெஸ்ட் கோஸ்ட் கடற்கரை, செம்பவாங் கடற்கரை, பாசிர் ரிஸ் கடற்கரை, பொங்கோல் கடற்கரை, கோனித் தீவில் உள்ள கடற்கரை ஆகியவற்றில் புகைப்பிடிக்கக்கூடாது.
இருப்பினும், பொது இடங்களில் உள்ள திறந்தவெளிகளில் புகைப்பிடிக்க அனுமதி உண்டு.
உதாரணத்துக்கு காலி நிலங்கள், கூரையில்லாத நடைப்பாதைகள், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தின் மொட்டை மாடி ஆகிய இடங்களில் புகைப்பிடிக்கலாம்.
புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட இடங்களுக்கும் சிகரெட் புகை செல்லக்கூடிய சாத்தியம் இல்லாத வரை வீட்டில் இருக்கும்போதும் அல்லது காருக்குள் இருக்கும்போதும் புகைப்பிடிக்க அனுமதி உள்ளது.

