எஸ்ஐஏ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு

2 mins read
9bbf2d7a-0a00-464f-8626-ee76bef7177b
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 37 வயது அமெரிக்க ஆடவர் மீது வேண்டுமென்றே தீங்கு விளைவித்தது, பதற்றம் ஏற்படுத்தியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த எஸ்ஐஏ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக டா ஏண்டி ஹியன் டிக் கத்தியுள்ளார். சக பயணி ஒருவரின் கைப்பெட்டியைப் பறிக்க அவர் முயன்றுள்ளார். அவரைத் தடுக்க முயன்ற விமானப் பணியாளரையும் தாக்கியுள்ளார்.

ஏண்டியை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு சோதனையிட்டபோது, அவர் கட்டுப்படுத்தப்பட்ட போதை மருந்து உட்கொண்டிருந்ததாகத் தெரியவந்தது. ஏண்டி தற்போது மனநல மருத்துவ நிலையத்தில் பரிசோதனைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எஸ்கியூ33 விமானம் திங்கட்கிழமை இரவு 10.26 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 1.25 மணி) அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து புறப்பட்டது. விமானத்தில் 208 பயணிகள் இருந்தனர்.

சிங்கப்பூரில் தரையிறங்குவதற்கு ஆறு மணிநேரம் இருந்தபோது, கைப்பெட்டி ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக ஏண்டி கூறியுள்ளார். விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து புதன்கிழமை விடியற்காலை 2.40 மணிக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது. சிங்கப்பூர் ஆகாயப் படையின் எஃப்-16 ரக போர் விமானங்களின் பாதுகாப்புடன் சாங்கி விமான நிலையத்தில் காலை 5.50மணிக்கு விமானம் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் விமான முனையம் 3ல் உள்ள ஓடுபாதையின் தனிமையான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் ரசாயன, உயிரியல், கதிரியக்க, வெடிகுண்டு தற்காப்புக் குழு விமானத்தை சோதனையிட்டு வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்று உறுதி செய்தது.

பொதுமக்களிடையே பதற்றம் ஏற்படுத்தக்கூடிய பொய்யான தகவல்களை விடுப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது என்று எச்சரிக்கப்பட்டது. பொய்யான மிரட்டல்கள் மக்களிடைய பீதியை ஏற்படுத்துவதோடு, அத்தகைய சம்பவங்களை விசாரிக்க பல பொதுவளங்களைப் பயன்படுத்த வேண்டியிருப்பதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.