இரண்டாம் போருக்குப் பிறகு போரில் நாசமடைந்த உலக நாடுகளை மீட்டெடுக்கவும் எதிர்கால நிதி நெருக்கடியிலிருந்து பாதுகாக்கவும் உலகத் தலைவர்கள் ஒன்றாகச் சேர்ந்து உலக வங்கி, அனைத்துலக பண நிதியத்தை உருவாக்கினர்.
அதுபோன்று இரண்டு ஆண்டு களாக கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட பிறகு உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பை சீரமைப்பது குறித்து உலக மக்கள் ஆராய்ந்து வருவதாக இந்தோனீசிய சுகாதார அமைச்சர் புடி குனாடி சடிகின் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே தமது நாடு தலைமை வகித்த ஜி20 மாநாட்டில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றார் அவர்.
ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற ஆசிய நன்கொடை உச்சநிலை மாநாட்டில் அவர், சிங்கப்பூரின் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் கென்னத் மாக்குடன் சேர்ந்து பதிலளித்தார்.
அப்போது அடுத்த கொள்ளைநோய்க்கு முன்பே அதற்கான நடைமுறைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று திரு புடி சொன்னார். நிதி நெருக்கடி ஏற்பட்டால் உலக வங்கியும் அனைத்துலக பண நிதியமும் நடவடிக்கைகளை எடுக்க முன்வருவதை அவர் சுட்டிக் காட்டினார். சுகாதார நெருக்கடியின்போது உலக சுகாதார நிறுவனம் தனது கொள்கைகளுடன் உதவ முடியும். ஆனால் அது அதிகம் செய்யக்கூடிய அளவுக்கு போதுமான வளம் அதனிடம் இல்லை. தடுப்பூசி மற்றும் சிகிச்சைகளை நாடுகளே கையாள வேண்டும் என்று அவர் கூறினார்.
கொள்ளைநோய் சமயத்தில் நாடுகளிடையே தடுப்பு நடவடிக்கை களுக்கான நடைமுறைகள் ஒரே மாதிரி இருக்கவும் தகவல்களை பகிர்ந்துகொள்ளவும் முறையான கட்டமைப்பு ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத் தினார்.