செங்காங்கில் 74 வயது பாதசாரியை மோதிய எஸ்எம்ஆர்டி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காம்பஸ்வேல் சாலைக்கும் காம்பஸ்வேல் டிரைவுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நடந்த விபத்து குறித்து நேற்று முன்தினம் இரவு 10.50 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
பாதிக்கப்பட்ட முதியவர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட படங்களில், நின்றுகொண்டிருக்கும் எஸ்எம்ஆர்டி பேருந்துக்கு அருகே காயமடைந்த முதியவர் சாலையில் கிடப்பதையும் அவருக்கு அருகே சிலர் கூடி நிற்பதையும் காணமுடிகிறது.
பேருந்துச் சேவை எண் 110ஐ ஓட்டிச்சென்ற 68 வயது ஓட்டுநர் விபத்து நடந்த நேரத்தில் சாலையின் வலது பக்கம் பேருந்தைத் திருப்பியதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் சொன்னது.
அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட முதியவருக்கு நிறுவனம் உதவிவருவதாகவும் எஸ்எம்ஆர்டி கூறியது. கவனக்குறைவால் படுகாயம் விளைவித்ததற்காகப் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

