புதிய கோழிகளைச் செய்தித்தாளால் மடித்து, அதை பையின் அடியில் வைத்து அதன் மேல் காய்கறிகளை நிரப்ப வேண்டும். பின்னர் அந்தப் பையை காரில், பயணிகள் காலடிக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும். ஜோகூரிலிருந்து இவ்வாறு புதிய கோழிகளை சிங்கப்பூருக்குள் மறைத்து கொண்டு வர முடியும் என்கின்றனர் இங்குள்ள கோழி விற்பனையாளர்கள்.
வாரந்தோறும் சிங்கப்பூரர்களில் சிலர், தங்களிடமிருந்து கோழிகளை வாங்கிச் செல்வதாக ஜோகூரின் கோழி விற்பனையாளர்களும் பேரங்காடி ஊழியர்களும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
மலேசிய அரசாங்கம் கடந்த ஜூன் மாதம், கோழி ஏற்றுமதிக்குத் தடை விதித்ததிலிருந்து சிங்கப்பூரில் புதிய கோழிகள் விற்பனைக்குத் தட்டுப்பாடு வந்தது.
மலேசியாவிலிருந்து புதிய கோழிகளை, அது சொந்த உபயோகத்துக்கு இருந்தாலும்கூட, முறையான உரிமமின்றி கொண்டு வந்தால், கொள்முதல் இறைச்சி மற்றும் மீன் சட்டத்தின்படி அது குற்றமாகக் கருதப்படும்.
அவ்வாறு உரிமமின்றி இறைச்சி அல்லது மீன்களை இறக்குமதி செய்வோருக்கு ஈராண்டு சிறையும் $50,000 அபராதமும் விதிக்கப்படலாம். மேலும் தனிப்பட்ட குற்றத்துக்கு $1,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆனால், இந்த சட்ட நடவடிக்கைக்கு சிங்கப்பூரர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஜோகூர் லார்கின் சந்தையில் 70 வயதான கோழி விற்பனையாளர் ஒருவர், "நடுத்தர வயதுள்ள சிங்கப்பூர் பெண்கள் பலர் வாரந்தோறும் என்னிடம் புதிய கோழிகளை வாங்கிச் செல்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் ஓரிரு புதிய கோழிகளை வாங்குகின்றனர்.
"அவர்களில் ஒருவர் கோழியைச் செய்தித்தாளில் மூடி, அதன் மேல் காய்கறிகளை வைத்து, பின்னர் அதன் மேல் சில செய்தித் தாள்களை வைத்து மடிப்பர்.
"சிங்கப்பூரில் புதிய கோழிகள் கிடைப்பது சிரமம் என்பதால், சட்டத்துக்குப் புறம்பாக புதிய கோழிகளை வாங்கவும் தாங்கள் துணிந்துவிட்டதாக என்னிடம் கூறினார்," என்று விவரித்தார்.
ஜோகூரில் 1.2 கிலோ புதிய கோழி 15 ரிங்கிட்டுக்கு ($4.60) விற்கப்படுகிறது. அதே வகையான கோழி சிங்கப்பூரில் $6க்கு விற்கப்படுகிறது. மலேசியாவிலிருந்து வரும் பயணிகள் மாடு, ஆடு, பன்றி, பறவை சார்ந்த இறைச்சி வகைகளை அவை சமைக்கப்பட்டிருந்தாலும்கூட கொண்டு வர முடியாது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.